Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
முதலாவது டெஸ்டில் இந்தியா அபார வெற்றிமுகமது ஷமியின் வேகத்தில் சுருண்டது தென்ஆப்பிரிக்கா. | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Thursday , 7 July 2022
Home » இந்தியா » முதலாவது டெஸ்டில் இந்தியா அபார வெற்றிமுகமது ஷமியின் வேகத்தில் சுருண்டது தென்ஆப்பிரிக்கா.

முதலாவது டெஸ்டில் இந்தியா அபார வெற்றிமுகமது ஷமியின் வேகத்தில் சுருண்டது தென்ஆப்பிரிக்கா.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

டெஸ்ட் கிரிக்கெட்

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 502 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 431 ரன்களும் குவித்தன. 71 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை அதிரடியாக ஆடிய இந்தியா 4 விக்கெட்டுக்கு 323 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 4-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 11 ரன் எடுத்திருந்தது. எய்டன் மார்க்ராம் (3 ரன்), தேனிஷ் டி புருன் (5 ரன்) களத்தில் இருந்தனர்.

மிரட்டிய ஷமி

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. டிரா செய்யும் முனைப்புடன் களம் கண்ட தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை இந்திய பவுலர்கள் மிரள வைத்தனர். மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் பந்து பெரிய அளவில் பவுன்ஸ் ஆகவில்லை. பந்து எழும்பாமல் அடிக்கடி கால்முட்டிக்கும் கீழாகவே வந்ததால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் திண்டாடிப்போனார்கள். அத்துடன் பந்து நன்கு சுழன்றும் திரும்பியது. சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆப்-ஸ்டம்புக்கு வெளியே வீசிய தாழ்வாக வந்த பந்தை டி புருன் (10 ரன்) அடிக்க முற்பட்ட போது பந்து பேட்டில் பட்டு ஸ்டம்பையும் பதம் பார்த்தது.

தொடர்ந்து தென்ஆப்பிரிக்காவின் மிடில் வரிசையை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சீர்குலைத்தார். ஸ்டம்பை குறி வைத்து அவர் துல்லியமாக வீசிய பந்தில் துணை கேப்டன் டெம்பா பவுமா (0) தடுமாறி விழுந்தார். அதற்குள் பந்து ஸ்டம்புகளை சூறையாடியது. கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (13 ரன்) முகமது ஷமி வீசிய பந்து ஆப்-ஸ்டம்புக்கு வெளியே போவதாக நினைத்து பேட்டை உயர்த்தினார். ஆனால் இன்ஸ்விங்கான அந்த பந்து ஆப்-ஸ்டம்பை தெறிக்க விட்டது. ஒரு கணம் நம்ப முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போன அவர், ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். இதே போல் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் (0) பந்தை தடுத்து ஆட முயற்சித்த போது, அது அவரது காலுக்கும், பேட்டுக்கும் இடையே ஊடுருவி ஸ்டம்புக்கு முத்தமிட்டது. அடுத்தடுத்து விக்கெட் வீழ்ச்சியால் இந்தியாவின் கை ஓங்கியது.

ஜடேஜா கலக்கல்

இதைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா தனது சுழல் ஜாலத்தில் மேலும் பிடியை இறுக்கினார். அதாவது அவர் ஒரே ஓவரில் 3 வீரர்களுக்கு ‘செக்’ வைத்தார். விக்கெட் சரிவுக்கு மத்தியில் போராடிய தொடக்க ஆட்டக்காரர் மார்க்ராம் (39 ரன், 74 பந்து) ஜடேஜாவின் பந்து வீச்சில் அவரிடமே பிடிபட்டார். தொடர்ந்து அவரது சுழன்று திரும்பிய பந்துகளில் பிலாண்டர், கேஷவ் மகராஜ் எல்.பிடபிள்யூ. ஆனார்கள்.

அப்போது தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுக்கு 70 ரன்களுடன் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனால் காலைப்பகுதியிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்து விடலாம் என்று இந்திய வீரர்களும், ரசிகர்களும் ஆவல் கொண்டனர்.

குடைச்சல் கொடுத்த ஜோடி

இந்த நெருக்கடியான சூழலில் 9-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த டேன் பீட்டும், அறிமுக வீரர் செனுரன் முத்துசாமியும் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைதேர்ந்த பேட்ஸ்மேன்கள் போல் ஆடிய இவர்கள் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டவும் தவறவில்லை. இந்திய பவுலர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்த இவர்கள் ஆட்டத்தை மதிய உணவு இடைவேளையை தாண்டி நகர்த்தி சென்றனர். டேன் பீட் அரைசதம் அடித்தார்.

2 மணி நேரத்திற்கு மேலாக குடைச்சல் கொடுத்த இந்த ஜோடிக்கு கடைசியில் முகமது ஷமி ‘வேட்டு’ வைத்தார். அவர் வீசிய பந்து டேன் பீட்டின் (56 ரன், 107 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) பேட்டில் பட்டு ஸ்டம்பை தகர்த்தது. இதில் ஸ்டம்பு உடைந்தே போய் விட்டது. டேன் பீட்டும், முத்துசாமியும் 9-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் திரட்டியது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அடுத்து வந்த ரபடா (18 ரன்) ஷமியின் பந்து வீச்சில் கேட்ச் ஆக, தென்ஆப்பிரிக்காவின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

இந்தியா வெற்றி

அந்த அணி 2-வது இன்னிங்சில் 63.5 ஓவர்களில் 191 ரன்களுக்கு சுருண்டது. முத்துசாமி 49 ரன்களுடன் (108 பந்து, 5 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தார். இதன் மூலம் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. முகமது ஷமி 5 விக்கெட்டுகளும், ஜடேஜா 4 விக்கெட்டுகளும் அள்ளினர். இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து முத்திரை பதித்த இந்திய வீரர் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 10-ந்தேதி புனேயில் தொடங்குகிறது.

40 புள்ளி கிடைத்தது

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது. இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு 40 புள்ளிகள் கிடைத்தது. இதையடுத்து சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா மொத்தம் 160 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து, இலங்கை தலா 60 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளன.

தென்ஆப்பிரிக்காவுக்கு உலக சாம்பியன்ஷிப்பில் இது தான் முதல் போட்டியாகும். அதனால் அந்த அணி இன்னும் புள்ளி கணக்கை தொடங்கவில்லை.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com