ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் தோனி, 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரையில் அந்தப் பதவியில் நீடித்தால் அது தனக்கு ஆச்சரியமளிக்கும் விஷயமாக இருக்கும் என்று அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
இந்திய அணியின் கேப்டனாக தோனி 9 ஆண்டுகளாக இருந்து வருகிறார். உண்மையிலேயே இது நீண்ட காலமாகும். ஒரு கேப்டனாக அவர் தனது பணியை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.
ஆனால், அடுத்த உலகக் கோப்பை வரையிலான 4 ஆண்டுகளுக்கு கேப்டனாக அவரால் நீடிக்க இயலுமா? ஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ள நிலையில், தற்போது ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.
எனவே, அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரையில் தோனி கேப்டனாக இருக்க முடியுமா என்பதற்கு அணி தேர்வாளர்கள் பதில் கண்டறிய வேண்டும். அவரால் முடியாது என தெரியவரும் பட்சத்தில், புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டும். ஒருவேளை அவரால் கேப்டனாக தொடர முடியும் என்றால், அது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கும்.
சர்வதேச அளவில் ஒவ்வொரு கிரிக்கெட் அணியும் தங்களது எதிர்காலத்தை திட்டமிடுகின்றன. அடுத்த 3-4 ஆண்டுகளுக்கு தோனியால் கேப்டனாக நீடிக்க முடியும் என்று அணித் தேர்வாளர்கள் கருதுகின்றனரா என்பதே எனது கேள்வி.
எனினும், தோனி கிரிக்கெட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்று நான் கூறவில்லை. சர்வதேச அளவில் குறுகிய ஓவர் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும். இந்திய அணிக்கு அவர் போன்ற ஒரு வீரர் தேவை.
கோலி ஆதரவு: அதேவேளையில், ஒவ்வொரு ஆட்டத்திலும் கோலி மேம்பட்டு வருகிறார். நிலைத்த தன்மையுடன் ஆடுவதில், உலகிலேயே அவர் மிகச் சிறந்த வீரர் என்றே கூறலாம். களத்தில் அவரது மனநிலை, உறுதித் தன்மை போன்றவை சிறப்பானதாக உள்ளது. டெஸ்ட் போட்டியின் கேப்டனாக அவர் சிறப்பாக செயல்படுகிறார்.
தோனிக்குப் பதிலாக கோலியை கேப்டனாக நியமிப்பதென்பது, தோனியை புறக்கணிப்பதாக ஆகிவிடாது. தோனி நாட்டின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் என்பது மறுக்க முடியாதது என்று கங்குலி கூறினார்.