இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை நாளை காலை 8.30 மணி அளவில் சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவிருக்கிறது.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 1-0 என்ற கணக்கில் இந்தியா அணி முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது போட்டி தற்போது மொஹாலியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 5-வது போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை காலை 8.30 மணி முதல் விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட்டுக்கான பணத்தை கிரெடிட், டெபிட் கார்டு மூலமாகவும் செலுத்தலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும் ஒருவருக்கு இரண்டு டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்றும் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம் என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.