இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவிசாஸ்திரிக்கு ரூ.7 கோடியில் இருந்து ரூ.7.5 கோடி வரை சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் ரவிசாஸ்திரி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அணியின் உதவி பயிற்சியாளர்கள், ரவிசாஸ்திரியுடன் கலந்து ஆலோசித்து வருகிற 22-ம் தேதி தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். ரவிசாஸ்திரி மற்றும் அணியின் உதவி பயிற்சியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்குவது என்பது குறித்து நிர்ணயிக்க, 4 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கமிட்டியின் கூட்டம் 19-ம் தேதி நடக்கிறது. புதிய கமிட்டி, சம்பளம் குறித்த தங்களது சிபாரிசுகளை 22-ம் தேதி நிர்வாக கமிட்டியிடம் அளிப்பார்கள்.
இதற்கிடையே ரவி சாஸ்திரிக்கு வருடத்துக்கு ரூ.7 கோடிக்கு அதிகமாக சம்பளம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதைதான் அனில் கும்ப்ளே புதிய சம்பள விகிதம் குறித்து கடந்த மே மாதம் அளித்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். உதவி பயிற்சியாளர்களுக்கு ரூ.2 கோடி வரை கிடைக்கும்.
19 வயதுக்குட்பட்டோருக்கான அணி மற்றும் இந்திய ஏ அணி பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டுக்கு முதல் வருடம் ரூ.4.5 கோடியும் அடுத்த வருடம் ரூ.5 கோடியும் வழங்கப்பட்டு வந்தது. இப்போது பேட்டிங் ஆலோசகராக நியமிக்கப்படும் அவருக்கு அதிகமாகக் கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது.