சமையல் கியாஸ், பெட்ரோலிய பொருட்களின் மானியங்களை குறைக்கும் எண்ணம் இல்லை. அவைகளின் விநியோகத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து சமையல் கியாஸ், பெட்ரோலிய பொருட்களின் மீதான மானியங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு விடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்தது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இது குறித்து விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது. அதில், சமையல் கியாஸ் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் மீதான மானியங்கள் தொடரும். எனவே பொதுமக்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதுபோல, மானியங்களை சீர்படுத்தவும், விநியோகத்தில் உள்ள குறைகளை நீக்குவதற்கும் உரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். சமையல் கியாஸ், மண்எண்ணெய் மானியங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சமுதாயத்தில் கீழ் நிலையில் உள்ளவர்கள், ஏழைகள் நலன் கருதி வசதி படைத்தவர்கள் சமையல் கியாஸ் மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று தான் நிதி அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், சமையல் கியாஸ் மானியம் நேரடியாக வழங்கும் திட்டத்தின்படி இதுவரை 11 அரை கோடி மக்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் உற்பத்தி வரி விதிக்கப்பட்டது, சாலை மற்றும் இதர கட்டமைப்பு வசதிகள், கல்வி செஸ் போன்றவற்றுக்காக ரூபாய் 40 ஆயிரம் கோடி திரட்டும் வரை மட்டுமே நீடிக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Home » முக்கிய செய்திகள்: » சமையல் கியாஸ், பெட்ரோலிய பொருட்களின், மானியங்களை குறைக்கும் எண்ணம் இல்லை!