உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெற்ற 27–வது லீக் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள வங்கதேசம் – ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங் செய்ய தீர்மானித்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் கோயட்சர் 156 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்த படியாக மோம்சென் 39, மேச்சன் 35 ரன்கள் எடுத்தனர். வங்கதேச தரப்பில் டஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் வெற்றிக்கு 319 ரன்கள் தேவை என்ற இலக்குடன் வங்கதேச அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக தமீம் இக்பாலும், சவும்யா சர்க்காரும் களமிறங்கினர். 2வது ஓவரிலேயே 2 ரன்னுக்கு அவுட்டாகி நடையை கட்டினார் சவுமியா. அடுத்து மகமதுல்லா, தமீமுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால் வங்கதேச அணியின் ரன்ரேட் ஏகத்துக்கும் எகிறியது. 8.1 ஓவரில் 50 ரன்களை குவித்த வங்கதேசம், 17வது ஓவரில் 100 ரன்களை தொட்டது. தமீமும் 17வது ஓவரில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். 20வது ஓவரில் மகமதுல்லாவும் அரை சதம் அடிக்க, அணியின் ஸ்கோர் 123-ஐ தொட்டது. இந்நிலையில் 24வது ஓவரில் 62 ரன்களுக்கு மகமதுல்லா அவுட்டானார். அடுத்து களமிறங்கிய முஷ்பிகுரும் அதிரடியை கடைபிடித்தார். 28வது ஓவரின் கடைசி பந்தில் தமீம் 1 ரன் எடுக்க அவரது ஸ்கோர் 88 ஆக உயர்ந்தது. இது தான் உலக கோப்பை போட்டிகளில் வங்கதேச வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் அஸ்ரபுல் 87 ரன்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதிரடியாக விளையாடி வந்த முஷ்பிகுர் 30வது ஓவரில் மிட் விக்கெட் சிக்சரை பறக்கவிட, அணியின் ஸ்கோரும் 191 ஆனது. 32வது ஓவரில் தமீம் துரதிருஷ்டவசமாக 95 ரன்களுக்கு அவுட்டானார். இதையடுத்து ஷகிப் அல் ஹசன் களமிறங்கினார். 36வது ஓவரில் பவர்பிளே எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து 37வது ஓவரில் அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரிகளை அடித்து அசத்தினார் முஷ்பிகுர். ஆனால் அடுத்த ஓவரிலேயே 60 ரன்னுக்கு(42 பந்துகள்) அவுட்டானார். 6வது விக்கெட்டுக்கு சபீர் களமிறங்கினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றி தேடி தந்தனர். 49வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ஷகிப் தனது அரை சதத்தை பூர்த்தி செய்ததுடன் வெற்றிக்கான ரன்களையும் அடித்தார். மறுமுனையில் சபீர் 42 ரன்கள் எடுத்திருந்தார். 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 322 ரன்களை குவித்து வங்கதேசம் வெற்றி பெற்றது.