உலக கோப்பை போட்டியில் நாளை நடைபெறும் 34–வது ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள இந்தியா– அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.நடப்பு சாம்பியனான டோனி தலைமையிலான இந்திய அணி தான் மோதிய 4 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 76 ரன் வித்தியாசத்திலும், அதைத்தொடர்ந்து தென்ஆப்பிரிக்காவை 130 ரன்னிலும், ஐக்கிய அரபு எமிரேட்சை 9 விக்கெட்டிலும், வெஸ்ட்இண்டீசை 4 விக்கெட்டிலும் வீழ்த்தியது.கால்இறுதியில் நுழைந்த இந்திய அணி தொடர்ந்து 5–வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக மட்டும் போராடி வென்றது. மற்ற ஆட்டங்கள் எளிதாக இருந்தது.இதுவரை ஆஸ்திரேலியாவில் விளையாடிய இந்திய அணி தற்போது நியூசிலாந்து மண்ணில் சந்திக்கிறது. அங்குள்ள தட்ப வெப்பநிலை, ஆடுகளத்தின் தன்மை சவாலை வீரர்கள் சமாளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அயர்லாந்து அணியை சாதாரணமாகவும் எடுத்துக்கொள்ளாது.ரோகித்சர்மா இதுவரை நல்ல ஒரு இன்னிங்சை வெளிப்படுத்தவில்லை. இதேபோல ரவிந்திர ஜடேஜாவும் பேட்டிங்கில் சாதிக்க திணறுகிறார். வீராட் கோலி ஒருவர் தான் நிலைத்து நின்று ஆடுகிறார். தவான், ரெய்னா, ரகானே, கேப்டன் டோனி போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், முகமது ஷமி, அஸ்வின், மொகித்சர்மா போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.பி’ பிரிவில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி ரன்ரேட்டிலும் நல்ல நிலையில் உள்ளது. அயர்லாந்தையும் வீழ்த்தி வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள இந்திய அணி முயற்சிக்கும்.6 புள்ளியுடன் இருக்கும் அயர்லாந்து நாளைய ஆட்டத்தில் வென்றால் கால்இறுதிக்கு நுழைந்துவிடும். வெஸ்ட்இண்டீஸ் அணி வெளியேற்றப்படும் நிலை ஏற்படும். இதனால் இந்தியாவின் வெற்றிக்காக வெஸ்ட்இண்டீஸ் பிரார்த்திக்கும்.அயர்லாந்து அணி வெஸ்ட் இண்டீஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜிம்பாப்வே அணிகளை வீழ்த்தி இருந்தது. தென்ஆப்பிரிக்காவிடம் தோற்று இருந்தது. அந்த அணியில் ஒபிரையன் சகோதரர்கள், எட்ஜாய்ஸ், பால் ஸ்டிர்லிங், ஜான்டூனி, கேப்டன் போட்டர் பீல்டு போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.இந்திய அணிக்கு எல்லா வகையிலும் அயர்லாந்து சவால் கொடுத்து விளையாடும் திறமை இருக்கிறது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 300 ரன்னுக்கு மேல் உள்ள இலக்கை எடுத்தது.இந்த ஆட்டம் ஹேமில்டன் நகரில் நடக்கிறது. பகல்–இரவாக நடைபெறும் இந்தப்போட்டி இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்சனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.