இந்திய கிரிக்கெட் வீரர் 34 வயதான யுவராஜ்சிங், மாடல் அழகியும் இந்தி நடிகையுமான 29 வயதான ஹாசல் கீச்சை காதலித்து வந்தார். ஏற்கனவே நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இவர்கள் நேற்று இல்வாழ்க்கையில் இணைந்தனர்.
யுவராஜ்சிங்–ஹாசல் கீச் திருமணம் பஞ்சாப் மாநிலம் சர்ஹிந்த்– சண்டிகார் ரோட்டில் உள்ள படேகர் சாஹிப்பில் உள்ள குருத்வாராவில், சீக்கிய மத சடங்குகளின்படி நேற்று நடந்தது. சீக்கிய மத தலைவர்களில் ஒருவரான பாபா ராம்சிங் தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தினார். இரு வீட்டாரின்உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் யுவராஜ்சிங்கின் தந்தை யோக்ராஜ்சிங் மகனின் திருமண விழாவில் கலந்து கொள்ளவில்லை. கடவுள் மீது நம்பிக்கை உண்டு, ஆனால் மத தலைவர்களின் மீது நம்பிக்கை கிடையாது என்று கூறி அங்கு செல்ல மறுத்து விட்டார். முன்னதாக நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு மற்றும் விருந்து நிகழ்ச்சி தடபுடலாக நடந்தது. இதில் விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கலந்து கொண்டனர்.