Tamilan Television - the soul of the world tamils
Untitled Document
மாவட்டங்கள்[பார்க்க]
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
மக்களிடையே தேர்தலில் ஓட்டுப் போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நடிகர் நடிகைகள் மட்டுமின்றி நானும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோவில் பேசி இருக்கிறேன்.பஸ்களிலும் துண்டு பிரசுரங்கள் ஒட்ட இருக்கிறோம். தேர்தலில் பணம் விநியோகிப்பதாக பல்வேறு புகார்கள் வருவதால் ஏற்கனவே பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்துகிறார்கள். கண்காணிப்பு குழுவினரும் அவ்வாறு சோதனை போடுகிறார்கள்.
வருகிற 20ந்தேதியில் இருந்து 10 பூத் அடங்கிய பகுதியை ஒரு மண்டலமாக பிரித்து அதற்கு ஒரு அதிகாரி உதவியாளர்கள் 3 போலீசார் நியமிக்கப்பட்டு அவர்களும் சோதனை நடத்துவார்கள். மொத்தம் 5360 மண்டலங்களில் இதே போல் அங்காங்கே சோதனை நடத்தப்படும். இதற்காக அந்த மண்டலங்களில் கூடுதலாக 5360 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.தேர்தலில் ஓட்டுப் போடுவதை வலியுறுத்தி ஓட்டுப்பதிவுக்கு முதல் நாள் செல்போனில் நாளை ஓட்டுப்போடுங்கள் என்று தகவல் அனுப்பப்படும். ஓட்டுப்பதிவு அன்றும் நினைவு படுத்துவோம். டி.வி.க்களிலும் விளம்பரப்படுத்தப்படும். தேர்தல் கமிஷனில் 60 லட்சம் மொபைல் எண்கள் உள்ளன. அவற்றின் மூலம் தகவல் அனுப்பப்படும்.
பொதுக்கூட்டங்களுக்கு பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வருவதாக புகார் வருவதால் அதுபற்றி கிராமங்களிலும் கண்காணிக்கிறோம்.ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுபவர்கள் கையெழுத்து போட்டுவிட்டு பிரசார கூட்டத்துக்கு சென்று விட்டார்களா? என்று சோதனை நடத்துகிறார்கள். இதற்காக அதிகாரிகள் அங்குள்ள பதிவேட்டை சரிபார்த்து கண்காணிப்பார்கள்.
தேர்தல் விதி மீறல் தொடர்பாக 84600 புகார்கள் வந்துள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு 4000 புகார்கள் வருகிறது. புளியங்குடியில் அரசியல் பிரமுகர் ஒருவரிடம் ரூ.1 கோடி இருந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு கணக்கு இருக்கிறதா? என்று விசாரணை நடக்கிறது.
ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களை எங்கள் பகுதிக்கு வரக்கூடாது என்று தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. பொது இடத்தில் பிரசாரம் செய்ய ஊருக்குள் சென்று ஓட்டு கேட்க எல்லோருக்கும் உரிமை உண்டு. அதை யாராலும் தடுக்க முடியாது.வேட்பாளர்களை யாரும் தாக்கினால் அவர்கள் உடனே கைது செய்யப்படுகிறார்கள். அந்தப் பகுதியில் வேட்பாளருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும்.காணொளி செய்திகள் | உங்கள் கருத்து

[பார்க்க]
கன்னியாகுமரியில் நடந்த கூட்டத்தில் சோனியா பேசும்போது கூறியதாவது
இந்தியாவின் ஒருமைப் பாட்டை பாதுகாக்கவும் தலைவர்களின் தியாகம் வீண் போகாமல் இருக்கவும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் தமிழகத்தில் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக சிலர் கூறி வருகிறார்கள். காங்கிரசை யாராலும் தனிமைப்படுத்த முடியாது.காங்கிரசுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது. தமிழகத்தில் ஏராளமான தொண்டர்கள் காங்கிரஸ் பக்கம் இருக்கிறார்கள். எனவே இங்கு காங்கிரஸ் தனியாக நிற்கிறது என்று யாரும் எண்ண வேண்டாம்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று அறிவித்துள்ளோம். அதில் முக்கியமான சில திட்டங்களை தெரிவிக்க விரும்புகிறேன்.குறிப்பாக அனைவருக்கும் மருத்துவ உதவி எல்லோருக்கும் வீடு மாற்று திறனாளிகள் ஏழைகளுக்கு ஓய்வூதியம் ஆகியவை அவர்களின் உரிமையாக ஆக்கப்படும்.கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஒரு மத்திய பல்கலைக்கழகம் வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீண்டும் ஆட்சி பொறப்பேற்றதும் இங்கு மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்படும். அதுபோல இம்மாவட்ட மீனவர் நலன்காக்க புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதோடு விமான நிலையமும் அமைக்கப்படும்.
சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தாருங்கள். 39 தொகுதிகளிலும் போட்டியிடும் காங்கிரசாருக்கு கை சின்னத்தில் வாய்ப்பளியுங்கள்.காணொளி செய்திகள் | உங்கள் கருத்து

[பார்க்க]
திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக நல்லமுறையில் இருந்த சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட திண்டுக்கல்லில் மாநகராட்சிக்கான எந்த அம்சமும் இல்லை.மாநகராட்சியில் பணிபுரிந்த துப்புரவு பணியாளர்கள் நீக்கப்பட்டு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டதால் திண்டுக்கல் நகரம் குப்பை கூலமாக காட்சி அளிக்கிறது. இங்கு சுகாதாரம் இல்லை. மாநகராட்சியில் சிறந்த நிர்வாகம் இல்லை.
பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். பணி நீக்கம் செய்யப்பட்ட துப்புரவு தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்துவோம். நபார்டு மூலம் நிதி உதவி பெற்றுஇ திண்டுக்கல் பஸ்நிலையத்தை விரிவாக்கம் செய்து குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுப்போம்.திண்டுக்கல்லில் மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கை ஆகும். ஆனால் மருத்துவ கல்லூரியை ஆத்தூர் தொகுதியில் தொடங்குவதா? நத்தம் தொகுதியில் தொடங்குவதா? என்பதில் தி.மு.க. அ.தி.மு.க. கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.இதற்கு முற்றுப்புள்ளி வைத்து திண்டுக்கல்லில் மருத்துவ கல்லூரி அமைக்க துரித நடவடிக்கை எடுப்போம்.திண்டுக்கல்லில் பாரம்பரியம் மிக்க பூட்டு தொழிலை அழியவிட மாட்டோம். திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் வனத்துறையினர் உதவியுடன் அ.தி.மு.க.வினர் மரங்களை வெட்டி கடத்துவதை தடுப்போம்.திண்டுக்கல் நகரின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஒடுக்கம் குடிநீர் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்று வாக்குறுதி அளிக்கிறேன். இயற்கை மற்றும் கனிமவள கொள்ளையை தடுத்து அவைகளை பாதுகாப்போம்.
மின்வெட்டு பிரச்சினையில் தி.மு.க. மற்றும் மத்திய அரசு மீது பழியை போட்டு விட்டு ஜெயலலிதா தப்பிக்க பார்க்கிறார். நரேந்திரமோடி பிரதமர் ஆன பிறகு வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை தமிழகத்துக்கு கொண்டு வந்து மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.முல்லைப்பெரியாறு காவிரி ஆறு பாலாறு பிரச்சினைகளை தீர்த்து வைப்போம் என்று உறுதி அளிக்கிறேன். தங்க நாற்கர சாலை மூலம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இந்தியா முழுவதையும் இணைத்தார்.
இதேபோல் இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்து தமிழகத்தை நல்லரசாகவும் இந்தியாவை வல்லரசாகவும் மாற்றுவோம். நதிகள் இணைப்பு மூலம் தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும். விவசாயம் மேம்படுத்தப்படும்.காணொளி செய்திகள் | உங்கள் கருத்து

[பார்க்க]
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி ஆட்சியில்தான் இந்திய பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி அடைந்தது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியை ஆதரித்து விளாத்திகுளத்தில் பேசிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், வரும் நாடாளுமன்ற தேர்தல் ஒரு முக்கியமான காலகட்டத்தில் நடைபெறும் தேர்தல் 1951 முதல் இன்று வரை 15 நாடாளுமன்ற தேர்தல் பல்வேறு காலகட்டங்களில் நாம் சந்தித்து இருக்கிறோம். இப்போது நாம் சந்திப்பது மிக முக்கியமான தேர்தல். கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தியாவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. ஆகவே இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டுமென்று தெரிவித்தார்.
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து

[பார்க்க]
சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பணிக்காக கையகப்படுத்தும் நிலத்திற்கான இழப்பீட்டு மதிப்பை தமிழக அரசு நில உரிமையாளர்களுக்கு 2 வாரத்தில் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள அவுரா, சென்ட்ரல் டவர் ஓட்டல்களை மெட்ரோ ரயில் திட்டத்தற்காக கையகப்படுத்தியதில் தொடர்பான வழக்கில்  மெட்ரோ ரயில் பணிக்காக கையகப்படுத்தும் நிலத்திற்கான இழப்பீடு மதிப்பீட்டை சரியாக நிர்ணயித்து தமிழக அரசு நில உரிமையாளர்களுக்கு இன்னும் 2 வாரத்தில் வழங்க வேண்டும் என்றும், அதே போல அந்த 2 ஓட்டல்களும் இன்னும் இரண்டு வாரத்தில் அந்த இடத்தில் இருந்து காலி செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து

[பார்க்க]
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காங்கிரசுக்கும் பா.ஜ.க.விற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று தெரிவித்தார்.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர்.சுந்தரத்தை ஆதரித்து திருச்செங்கோட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரையாற்றினார். அப்போது,  காங்கிரசுக்கும், பா.ஜ.க.விற்;கும் எந்த வேறுபாடும் இல்லை. ஒரே மாதிரியான வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரக் கொள்கை, இந்திரா காலத்து வெளியுறவு கொள்கை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியது. பாலஸ்தீனம், திபெத், கிழக்கு பாகிஸ்தான் என பாதிக்கபட்டவர்களுக்கு உதவியாக இருந்தது அதன் அடிப்படையில் இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழின மக்களுக்காக போராடியவர்களுக்கு பயிற்சி, ஆயுத உதவி செய்தது. ஆனால் இன்று போராடுகிறவர்களை அழிக்கிற வேலையை நமது நாட்டு வெளியுறவுக் கொள்கை செய்கிறது.
நமது தொப்புள் கொடி உறவுகள் ஒன்றரை லட்சம் பேரை கொன்ற பிறகும் இலங்கையை நட்பு நாடு, ராஜபக்சேவை நண்பன் என்கிறது காங்கிரஸ் அரசு. அதையே தான் தனது வெளியுறவு கொள்கை என பாரதீய ஜனதாவும் சொல்கிறது. கச்சத்தீவு பிரச்சினையிலும் 2 கட்சிகளுக்கும் ஒரே நிலைப்பாடு தான். அ.தி.மு.க. இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்ற சிங்கள ராஜபக்சே அரசுக்கு தடைவிதிக்க வேண்டும், ராஜபக்சேவை போர் குற்றவாளி என அறிவிக்க வேண்டும், சிறையில் வாடும் 7 பேரின் விடுதலைக்கு சிறப்பு தீர்மானங்கள் என பல நன்மைகளை செய்த அ.தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்தார்.
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து

[பார்க்க]
ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பவித்திரவள்ளியை ஆதரித்து தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு திட்டமாயினும் முழுமையாக நிறைவடைந்ததா என்று கேள்வி எழுப்பினார்.
ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பவித்திரவள்ளியை ஆதரித்து தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், அதிமுக அமைச்சர்கள் அவர்களின் சொந்த தொகுதியில் கூட வாக்கு கேட்க முடியாத நிலையில் உள்ளனர். நாங்கள் மட்டும் மக்களை உரிமையோடும், உணர்வோடும் வாக்கு கேட்டு வருகிறோம். கடந்த திமுக ஆட்சியில் பலகோடி மதிப்பிலான மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியதால்தான் மக்களை சந்திக்க முடிகிறது என்று தெரிவித்தார்.
மேலும், கடந்த 3 ஆண்டுகால அதிமுக ஆட்சி முழுமையாக ஒரு திட்டத்தையாவது நிறைவேற்றி உள்ளதா என்று கேள்வி எழுப்பி மு.க.ஸ்டாலின் 1975ம் ஆண்டு கொங்கு வேளாளர் சமூகத்தினர் வேண்டுகோளை ஏற்று அப்போதைய திமுக அரசு, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததால்தான் அவர்கள் இன்று கல்வி வேலை வாய்ப்பில் முன்னேறி வருகின்றனர். அவர், தேர்தல் அறிக்கையில் ராமர் கோயில் கட்டுவோம் என்று வாக்குறுதி அளித்துள்ள பா.ஜ.க.வை எதிர்த்து ஜெயலலிதா பேசுவாரா என்றும், பா.ஜ.க.விற்க்கும், அதிமுகவிற்கும் ரகசிய தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டினார்.
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து

[பார்க்க]
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஆடூர் அகரம் என்ற கிராமத்தில் நாட்டு பட்டாசு தயாரிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இன்று காலை 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு குவியல்களும், மருந்துகளும் வெடித்து சிதறின. அந்த பகுதி முழுவதும் தீ பிடித்து எரிந்தது.
இதில் தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை வெளியே மீட்டு கொண்டு வந்தனர். அவர்களில் பலத்த தீ காயம் அடைந்த அஞ்சாப்புலி, வள்ளி உட்பட 3 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த அனைவரும் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து

[பார்க்க]
இந்தியன் பிரிமியர் லீக் 20 ஓவர் தொடர் 7வது சீசனின் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த ஐபிஎல் டி20 தொடர் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்த தொடரின் 7வது சீசன் போட்டிகள் இரண்டு கட்டமாக நடக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக முதல் கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு நாடுகளில் இன்று தொடங்கி ஏப். 30ம் தேதி வரை நடைபெறுகின்றன. இதைத் தொடர்ந்து 2ம் கட்ட ஆட்டங்கள் இந்தியாவில் மே 2ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறும். கடந்த முறை விளையாடிய புனே வாரியர்ஸ் அணி நீக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 8 அணிகள் களமிறங்குகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டங்களில் மோதுகின்றன.லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். இதில் முதல் இடம் மற்றும் 2வது இடம் பிடித்த அணிகளிடையே நடக்கும் போட்டியில் (குவாலிபயர் 1) வெல்லும் அணி நேரடியாக பைனலுக்கு தகுதி பெறும். 3வது மற்றும் 4வது இடம் பிடித்த அணிகள் மோதும் ஆட்டத்தில் (எலிமினேட்டர்) வெற்றி பெறும் அணியுடன் குவாலிபயர் 1ல் தோற்ற அணி மோதி (குவாலிபயர் 2) அதில் வெற்றி பெறும் அணி பைனலுக்கு முன்னேறும். இறுதிப் போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளது. இம்முறை புதிதாக வீரர்கள் ஏலம் நடத்தப்பட்டதால் அணிகளில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. டெல்லி அணி முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அபுதாபியில் இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் ரோகித் ஷர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது. இப்போட்டி சோனி செட் மேக்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.காணொளி செய்திகள் | உங்கள் கருத்து

[பார்க்க]
தி.மு.க. தென் மண்டல அமைப்பு செயலாளராக இருந்த மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் கூண்டோடு விலக்கப்பட்டனர். இதையடுத்து தி.மு.க.விற்கு எதிராக வியூகம் வகுத்துள்ள மு.க.அழகிரி தமிழகம் முழுவதும் தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதனிடையே காங்கிரஸ் ம.தி.மு.க. பா.ஜனதா கட்சி வேட்பாளர்கள் தங்களுக்கு ஆதரவு அளிக்கக்கோரி மு.க.அழகிரியை நேரில் சந்தித்து வலியுறுத்தி வருகிறார்கள். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் மு.க.அழகிரியும் தனது நிலைப்பாட்டை ஓரிரு நாளில் அறிவிக்க திட்டமிட்டுள்ளார்.இதற்காக மதுரை மாநகர் மாவட்ட கலைக்கப்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தனது ஆதரவாளர்களை அழைத்து மு.க.அழகிரி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மு.க.அழகிரி எந்த தவறும் செய்யாத உங்களை கட்சி பொறுப்புகளில் இருந்து தி.மு.க. தலைமை நீக்கியிருக்கிறது. எனவே உங்கள் பகுதிகளில் தி.மு.க.விற்கு விழும் ஓட்டுக்களை மாற்ற வேண்டும். இதன் மூலம் கட்சிக்கு பாடம் புகட்டி இந்த தேர்தலில் நாம் யார் என்பதை நிரூபிக்க வேண்டும்.
மதுரையில் தி.மு.க. 4வது இடத்திற்கு தள்ளப்பட வேண்டும். இதற்காக உங்களால் எத்தனை தி.மு.க. ஓட்டுக்களை எதிர்ப்பு ஓட்டுகளாக மாற்ற முடியுமோ? அதற்கான பணிகளை தீவிரமாக செய்ய வேண்டும். மதுரை தொகுதியை பொறுத்தவரை குறைந்தது ஒரு லட்சம் தி.மு.க. ஓட்டுக்களையாவது எதிர் ஓட்டுகளாக மாற்ற வேண்டும்.நம்மை சந்தித்து ஆதரவு கேட்ட கட்சிகளுக்கு நாம் ஓட்டளிக்க வேண்டும். எந்த கட்சிக்கு ஆதரவு என்பதை விரைவில் முடிவு செய்வோம்.
இவ்வாறு மு.க.அழகிரி ஆதரவாளர்களிடம் பேசியுள்ளார்.
மேலும் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து அந்தந்த பகுதிகளில் எவ்வளவு ஓட்டுகளை தி.மு.க.வுக்கு எதிராக மாற்ற முடியும் என்று விபரம் கேட்டறிந்தார்.மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் இந்த கூட்டம் குறித்து கூறுகையில்இ நம்மை மதித்துஇ நம்மை தேடிவந்த கட்சிகளை இந்த தேர்தலில் ஆதரிக்க வேண்டும். தற்போது மோடி அலை வீசுகிறது. அதனால் பா.ஜனதா கூட்டணியை ஆதரிக்கலாமா? என்று எங்களிடம் அண்ணன் அழகிரி கருத்து கேட்டார்.இது தொடர்பாக நாங்களும் கருத்து தெரிவித்துள்ளோம். மோடி ரஜினி சந்திப்பிற்கு பிறகு அழகிரியிடம் ரஜினியும் செல்போனில் பேசியிருக்கிறார். எனவே பா.ஜனதாவை ஆதரிப்பது தொடர்பாக விரைவில் அண்ணன் அழகிரி அறிவிப்பார் என்று தெரிவித்தனர்.
மு.க.அழகிரியின் இந்த அதிரடி உத்தரவு தென் மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காணொளி செய்திகள் | உங்கள் கருத்து

[பார்க்க]
உச்சநீதிமன்றம் திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அறிவித்தது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக திருநங்கைகள் தெரிவித்தனர்
மதுரையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருநங்கைகள் படும் அவதியும்,மனவேதனையும், வேலை இல்லாமல் திண்டாடும் தங்களை உலகில் ஒரு இனம் சார்ந்த மதிப்பீடு கூட இல்லாமல் மனஅழுத்ததிலும் மனவேதனைகளையும், துன்பங்களையும் சுமந்து வரும் திருநங்கைகளின் அவலநிலை குறித்து தமிழன் தொலைக்காட்சியின்  சிறப்பு பார்வையில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். அப்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலமாக திருநங்கைகள் பற்றிய குறுந்தகடுகளை திருநங்கைகளின் தலைவி பாரதி கண்ணமா வழங்க அதை வழக்கறிஞர் மகேந்திரன் பெற்று கொண்டார் இந்த நிலையில் மிக பெறிய வெற்றியாக திருநங்கைகளின் துயரத்திற்கு தீர்வாக உச்சநீதிமன்றம் திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரித்து அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுரிமை, சுகாதார காப்பீடு, கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என்று தேசிய சட்ட பணிகள் அமைப்பின் சார்பில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை நீதிபதி இராதாகிருஷ்ணன், சிக்கிரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்து தீர்ப்பு வழங்கியது. இந்த வெற்றி தமிழன் தொலைக்காட்சியும் காரணம் என்று மதுரையில் உள்ள திருநங்கைகள் தெரிவித்தனர்.இந்த வெற்றியை இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இது பற்றி திருநங்கை கூறும்போது.
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து

[பார்க்க]
திருவண்ணாமலை அருகே 160 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள  கிடாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி துரைக்கண்ணு - ஜெயலட்சுமி தம்பதிக்கு 4 வயதில் சூர்யா மற்றும் ஒன்றரை வயதில் சுஜித் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.தனது குழந்தைகளை விளையாட வைத்துவிட்டு, ஜெயலட்சுமி ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது, ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் தோண்டப்பட்டிருந்த 160 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் இரண்டு வயது குழந்தை சுஜித் தவறி விழுந்து விட்டான்.
இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, ஆழ்துளை கிணறை சுற்றி 6 பொக்கலைன் இயந்திரங்கள் மூலமாக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகின்றது. அத்துடன், மதுரை மற்றும் கோவையில் உள்ள மீட்பு குழுவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். 40 அடி ஆழத்தில் குழந்தை சிக்கி கொண்டிருப்பது தெரியவந்த நிலையில், குழந்தைக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது. மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, ஆழ்துளை கிணற்றின் உரிமையாளர் ஜெயபால் கைது செய்யப்பட்டார்.கடந்த பத்து நாட்களில் மட்டும் இதே போன்று மூன்று சம்பவங்கள் நடைபெற்றுளளது என்பது குறிப்பிடத்தக்கது.
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து

[பார்க்க]
ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பவித்திரவள்ளியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் மின் வெட்டிற்கு சதி திட்டம் தான் காரணம் என்றால் காவல்துறை மூலம் கண்காணிக்க வேண்டியது தானே என்று கேள்வி எழுப்பினார்.
கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில் அதிமுக அரசு மக்களுக்கு எதையும் செய்யவில்லை. காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியை பொருத்தவரை, திமுக ஆட்சியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தோம். காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூர், ஓலைப்பாளையம், நத்தக்காடையூர் ஆகிய பகுதிகளில் ரூபாய் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துணை மின் நிலையங்கள் அமைத்தோம்.ரூபாய் 3 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் காங்கயத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ரூபாய் 1 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் காங்கயம் அரசு மருத்துவமனை கட்டிடம் மேம்படு, வெள்ளகோவிலில் சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவை திமுக ஆட்சியில் தான் கட்டப்பட்டது என்று தெரிவித்தார்.
ஆனால் ஜெயலலிதா மூன்று ஆண்டு கால ஆட்சியில் என்ன செய்தார். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் முடக்கினார். காவிரி இரண்டாவது  கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூபாய் 42 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் அதையும் ஜெயலலிதா ஆட்சியில் முடக்கி விட்டார்கள் என்று தெரிவித்த ஸ்டாலின் தமிழகத்தில் மின் வெட்டிற்கு காரணம் சதிதிட்டம் தான் காரணம் என்றால் முதலமைச்சர் காவல்துறை மூலம் கண்காணிக்க வேண்டியது தானே என்றும் தெரிவித்தார்.
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து

[பார்க்க]
பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளதால், கச்சா எண்ணெய் இறுக்குமதிக்கான செலவு சற்று குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன் படி, டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு வரியுடன் சேர்த்து 85 காசுகளும்,சென்னையில் வரியுடன் சேர்த்து 89 காசுகள் குறைந்துள்ளது.இந்த விலை குறைப்பு நேற்ற நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. கடந்த 1ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் குறைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரே மாதத்தில் 2வது முறையாக பெட்ரோல் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து

[பார்க்க]
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் தமிழகத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்வதற்காக அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று கன்னியாகுமரி வருகிறார். இதற்காக கார்மேல் மாதா பள்ளி அருகேயுள்ள மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. சோனியா காந்தி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி பூம்புகார் படகுத் துறை மற்றும் காந்தி மண்டபம் பகுதியில் படகுகளில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கொட்டாரம், விவேகானந்தபுரம், சின்னமுட்டம், முக்கடல் சங்கமம் உள்ளிட்ட பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இதே போன்று தமிழகத்தில் தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கும் பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, நாளை வரை கிருஷ்ணகிரி, சேலம், கோவை, ஈரோடு, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நடைபெறும் பிரசார பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள மோடி, சேலத்துக்கு வர இருப்பதை அடுத்து, சேலம் மாவட்டம் முழுவதிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து

[பார்க்க]
ஆரணி மற்றும் வேலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் அதிமுகவின் லட்சியம் என்று தெரிவித்தார்.
ஆரணி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட செய்யாறில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசையும், அந்தக் கூட்டணியில் 9 ஆண்டுகள் அங்கம் வகித்து தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு உறுதுணையாக இருந்த திமுகவையும்தான் தங்களால் கடுமையாக விமர்சிக்க முடியும். ஏனெனில் இத்தேர்தலே காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு எதிராக நடைபெறும் தேர்தல் என்று தெரிவித்தார்.
மேலும், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் காவிரி நதி நீர்ப் பிரச்னை, முல்லைப் பெரியாறு அணை பிரச்னை, இலங்கைத் தமிழர் பிரச்னை, தமிழக மீனவர்கள் பிரச்னை, கச்சத்தீவு பிரச்னை ஆகியவை குறித்து எதுவுமே குறிப்பிடப்படவில்லை. எனவே, தமிழகத்தின் முக்கியமான பிரச்னைகளில் பாஜகவுக்கு அக்கறை இல்லை
இப்போதைய மக்களவைத் தேர்தல் முற்றிலும் மாறுபட்ட தேர்தல் முடிவுகளை அளிக்கக் கூடியது. இப்போதுள்ள சூழ்நிலையில் மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து மத்தியில் ஆட்சி அமைக்கும் நிலைதான் உள்ளது. மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் அதிமுகவின் லட்சியம் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து வேலூரை அடுத்த இறைவன்காட்டிலும் முதலமைச்சர் ஜெயலலிதா பரப்புரை மேற்கொண்டார்.
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து

[பார்க்க]
திருநங்கைகளை சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களாக கருதி, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் உரிய சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநங்கைகள் தொடர்பான வழக்கில் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், ஒவ்வொரு மனிதரும் தமது பாலினத்தைத் தேர்வு செய்துகொள்வதற்கு உரிமை உள்ளது. சாதி, மத, பாலினத்துக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் சமஉரிமை வழங்கிட அரசியலமைப்பு வழிவகுக்கிறது என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் என்ற அங்கீகாரத்துடன், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, நம் சமூகத்தில் திருநங்கைகள் மிகவும் சிறுமைப்படுத்தப்படுவதாகவும், மருத்துவமனைகளில் கூட அனுமதி மறுக்கப்படுவதாகவும் தேசிய சட்ட சேவை ஆணையம் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்தது. இந்த நிலைமைக்கு வேதனை வெளியிட்ட உச்ச நீதிமன்றம், சமூக நலத் திட்டங்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமை என்று தெரிவித்துள்ளது.
மேலும், கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை திருநங்கைகள் பெறுவதற்கு, உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து

[பார்க்க]
ஓட்டுக்காக பணம் கொடுத்தாலோ, வாங்கினாலோ அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதோடு, 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் அவர்கள் போட்டியிட முடியாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் 60 ஆயிரத்து 816 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் ஒரு கட்டுப்பாட்டு எந்திரம் மற்றும் வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்படும். 15 வாக்காளர்கள் வரை போட்டியிடும் தொகுதியில் ஒரு வாக்குப்பதிவு எந்திரம் பொருத்தப்படும். அதற்கும் கூடுதலாக வாக்காளர்கள் போட்டியிட்டால், அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்குப்பதிவு எந்திரங்கள் கூடுதலாக பொருத்தப்படும்தமிழகத்தில் தற்போது 70 ஆயிரம் கட்டுப்பாட்டு எந்திரங்களும், 1.25 லட்சம் வாக்குப்பதிவு எந்திரங்களும் உள்ளன. தற்போதைய நிலவரப்படி 10 ஆயிரத்து 500 வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றாக்குறை உள்ளது. தேர்தல் நடந்து முடிந்த பக்கத்து மாநிலங்களில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் பெறப்பட்டு பற்றாக்குறை நிறைவு செய்யப்படும்.
மேலும், ஓட்டுக்காக பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். அது நிரூபிக்கப்பட்டால் இரு தரப்பினருக்குமே ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும். அதோடு, வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுவதோடு, 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் அவர்கள் போட்டியிட முடியாது என்று தெரிவித்தார்.
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து

[பார்க்க]
திருப்பூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், பெண்களுக்கு என்று தனித் தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
திருப்பூர், ராயபுரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார  பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் பேசினார். அப்போது, தாய்மொழி, தாய்நாடு, கங்கை, யமுனை என நதிகளுக்கு பெண்களின் பெயரை சூட்டிய பெருமைமிக்க இந்நாட்டில், பெண்களுக்கான 33 சதவீதம் இட ஒதுக்கீடு பெறமுடியாத நிலை உள்ளது. பெண்களுக்கு எனத் தனித் தொகுதி வேண்டும். எந்த கட்சி வேட்பாளராக இருந்தாலும் அத்தொகுதிகளில் பெண் வேட்பாளர்களைத்தான் நிறுத்த வேண்டும் என்ற தெரிவித்தார்.
மேலும், ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை நாட்டை, நட்பு நாடு என காங்கிரஸார் கூறுகின்றனர். ராஜபட்சேவை நண்பர் என பாஜக கூறுகிறது. தனித் தமிழ் ஈழம் மலர பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும் என உறுதிபடக் கூறி, 7 பேர் விடுதலைக்கு காரணமாக இருக்கும் தமிழக முதல்வருக்கு மக்கள் ஆதரவு அளித்து, அதிமுக வேட்பாளர் வி.சத்யபாமாவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்தார்.
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து

[பார்க்க]
காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மாற்று அணி ஆட்சி அமைப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக திரிபுரா மாநில முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினருமான மாணிக்சர்கார் தெரிவித்தார்.
தஞ்சாவூர் திலகர் திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திரிபுரா மாநில முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினருமான மாணிக்சர்கார் கலந்து கொண்டு தஞ்சை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தமிழ்ச்செல்வியை ஆதரித்து, வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், விலைவாசி உயர்வு விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது, கடன் பிரச்சினை போன்ற காரணங்களால் விவசாயிகள் தற்கொலை, வேலையில்லா திண்டாட்டம், சாதி, மத சண்டை போன்ற கொடுமைகளுக்கு காங்கரஸ்தான் காரணம். சுதந்திரத்திற்கு பிறகு அதிகமாக கொடுமைகள் நிகழ்ந்தது காங்கிரஸ் ஆட்சியில் தான்.
எனவே, இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரக்கூடாது. தமிழ்நாட்டிலும் வெற்றி பெற கூடாது. கொடுமை தாண்டவம் ஆடும் இந்த நாட்டில் ரூபாய் 5 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களை கொண்ட 70 குடும்பங்கள் உள்ளன. பெரும் பணக்காரர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் அரசாகவே காங்கிரஸ் இருக்கிறது. எனவே, ஜனநாயகம் இறையாண்மை பாதுகாப்பை வலுப்படுத்த இடதுசாரிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மாற்று அணி ஆட்சி அமைப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து

[பார்க்க]
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் பிரசாரம் உச்ச கட்டத்தை எட்டி உள்ளது. இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் சென்னைக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி விட்டு சென்றுள்ளார். அவர் வழங்கிய ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.தமிழகத்தை பொறுத்தமட்டில் 1 லட்சம் தமிழக போலீசாருடன் சுமார் 14 ஆயிரம் துணை ராணுவப்படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். முன்னாள் ராணுவ வீரர்கள் முன்னாள் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். தமிழகத்திற்கு ஏற்கனவே சுமார் 3500 துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக வந்து விட்டனர். மேலும் 10500 துணை ராணுவ வீரர்கள் வருகிற 19 மற்றும் 20-ந் தேதிகளில் தமிழகம் வந்து விடுவார்கள் என்று தேர்தல் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.சென்னையை பொறுத்தமட்டில் 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் 18 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு சட்டசபை தொகுதிக்கு 100 பேர் வீதம் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் சுமார் 1800 துணை ராணுவ வீரர்கள் சென்னைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று காலையில் இருந்து பிற்பகல் வரை போலீஸ் கமிஷனர் திரிபாதி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். காணொளி செய்திகள் | உங்கள் கருத்து

[பார்க்க]
தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தையை கொழும்பில் அடுத்த மாதம் மே 12 மற்றும் 13ந் தேதிகளில் நடத்தலாம் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மீன்வளத்துறைச் செயலாளர் எஸ்.விஜயகுமார், மத்திய அரசின் வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் சுசித்ரா துரைக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே பேச்சு வார்த்தை நடத்தப்படுவதை முன்மொழிந்து 20.9.13 அன்று பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து 27.1.14 அன்று சென்னையில் இருதரப்பு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த நிலையில் வெளியுறவு துறை துணைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், மீனவர்களுக்கு இடையேயான அடுத்தகட்ட பேச்சு வார்த்தையை கொழும்பில் மே 12 மற்றும் 13ந் தேதிகளில் நடத்துவதற்கு இலங்கை அரசு தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அந்தக் கூட்டத்தை மே 12 மற்றும் 13ந் தேதிகளில் நடத்தலாம் என்பதை இலங்கை அரசுக்கு தகவலாகத் தெரிவிக்கலாம் என்றும்,  27.1.14 அன்று நடந்த மீனவர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அதே தமிழக, புதுச்சேரி மீனவர்கள்தான், அடுத்தகட்ட பேச்சு வார்த்தையிலும் கலந்துகொள்வார்கள். இந்த பேச்சுவார்த்தையில் வைக்கப்படும் நிகழ்ச்சி நிரல், 2.3.14 அன்று அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வரும் மீனவர்களுடன், அந்தக் கூட்டத்தை பார்வையிடுவதற்காக மீன்வளத்துறை செயலாளர், இயக்குனர், கூடுதல் இயக்குனர் ஆகியோரும் வருவார்கள் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து

[பார்க்க]
மக்களவைத் தேர்தல் முடியும் வரை, கல்விக் கடனுக்கான வட்டித் தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
மக்களவையில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் 2009ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பு பெறப்பட்ட கல்வி கடனுக்கான வட்டித் தொகை, 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ரூபாய் 2 ஆயிரத்து 600 கோடியாக உள்ளது என்றும், அதனை மத்திய அரசு தள்ளுபடி செய்கிறது என்றும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மக்களவைக்குத் தேர்தல் நடைபெறுவதால், அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மத்திய நிதியமைச்சகத்துக்கு  எழுதியுள்ள கடிதத்தில் மக்களவைத் தேர்தல் நடவடிக்கை முடிவடைந்த பிறகு, கல்விக் கடனுக்கான வட்டித் தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்தும்படியும், தேர்தல் காலங்களில் இந்தத் திட்டம் குறித்து விளம்பரப்படுத்தக் கூடாது என்றும் மத்திய நிதியமைச்சகத்தை தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
எனவே தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, அடுத்த மாதம் 17ஆம் தேதிக்குப் பிறகுதான் கல்விக் கடனுக்கான வட்டித் தள்ளுபடி திட்டத்தை மத்திய அரசால் செயல்படுத்த முடியும்.
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து

[பார்க்க]
நாமக்கல்லில் திமுக வேட்பாளர் காந்தி செல்வனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சியில் துவக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
நாமக்கல் தொகுதி தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து பேசிய ஸ்டாலின், தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் உதயசூரியன் உதிக்கப்போகிறது. தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. விசைத்தறி தொழில், மின்கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க, அமைத்துள்ள கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது. காவிரி பிரச்னையில் கர்நாடகாவில் பா.ஜ.க,வும் காங்கிரசும் ஒற்றுமையாக உள்ளன. இந்த விவகாரத்தில் இரு கட்சிகளுக்கு எந்தவித வேறுபாடுமில்லை. இலங்கை தமிழர் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் பா.ஜ.க, தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை. காவிரி பிரச்னையில் மட்டும் பா.ஜ.க,வை விமர்சிக்கும் ஜெயலலிதா பா.ஜ.க,வுடன் கூட்டணி உண்டா இல்லையா என்பது பற்றி தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து

[பார்க்க]
கோவையில் ஆதிமுகவை ஆதரித்து தேர்தல் பரப்புறை மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,தனி ஈழத்தை ஆதரிக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க. என்று தெரிவித்தார்.
கோவை ராஜவீதி தேர்நிலை திடலில் நாம் தமிழர் நாடாளுமன்ற தேர்தலும், நமது நிலைப்பாடும் என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது இலங்கை நம் நட்பு நாடு என்று சொல்கிறது பா.ஜ.க., இலங்கை நம் நட்பு நாடு. ராஜபக்சே நமது நண்பர் என்கிறது காங்கிரஸ் கட்சி.இலங்கை பகை நாடு என்று அறிவிக்க வேண்டும் என்றும், ராஜபக்சே ஒரு போர் குற்றவாளி. அவரையும் அவருடைய சகாக்களையும் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனை வாங்கி தர வேண்டும் என்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா. கச்சத்தீவு கொடுத்தது கொடுத்தது தான் என்கின்றன இரண்டு தேசிய கட்சிகளும்.அதை எடுத்தால் என் இன மீனவ மக்களுக்கு வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும் என்று உறுதியாக நினைப்பவர் முதலமைச்சர் ஜெயலலிதா.
இலங்கையில் ஒரு அரசை அமைக்க மறுக்கிறது இலங்கை அரசு. அதற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று நட்புறவை துண்டிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பவர் ஜெயலலிதா.இதையெல்லாம் மனதில் கொண்டு நீங்கள் அதிமுக வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும், அழிவின் விளிம்பில் இருக்கிற தமிழ் சமுதாயத்துக்கு ஒரே தீர்வு தனி ஈழ சோசலிச குடியரசு.இலங்கையில் தமிழர்களும், சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை. எனவே அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இலங்கையும், ஈழமும் பிரிய ஒரே வழி பொது வாக்கெடுப்பு தான் என்று தீர்மானம் நிறைவேற்றிய இந்தியாவின் ஒரே தலைவர் ஜெயலலிதா தான் என்று நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்தார்.
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து

[பார்க்க]
மீன்கள் இனப்பெருக்க காலத்தையொட்டி 45 நாட்கள் விசைப்படகுகளில் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவ முதல் அமலுக்கு வந்தது மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தை ரூபாய் 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வெண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதால் ஏப்ரல் 15ந்தேதி முதல் மே 29ந்தேதி வரை 45 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான தடைக் காலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.இன்று தொடங்கி மே 29ந்தேதி வரை அமுலில் இருக்கும். இதையொட்டி ராமேசுவரம், பாம்பன், மண்டபம், ஏர்வாடி, தொண்டி, சொழியக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
45 நாள் மீன்பிடி தடைக்காலத்தையொட்டி ராமேசுவரம் பகுதியில் நேற்று முதலே படகிலுள்ள மீன்பிடி வலை, மடிபலகை, ஐஸ் பாக்ஸ் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை வீடுகளுக்கு கொண்டு சென்றனர். ஆனால் நாட்டுப் படகு மீனவர்கள் மீன்பிடிக்க எந்த தடையும் இல்லை. ராமேசுவரம் தீவு பகுதி முழுவதும் சுமார் 800க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் உள்ளன. விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் நாட்டுப்படகுகளில் பிடித்து வரும் மீன்களின் விலையும் பல மடங்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீன்பிடி தடைகாலத்தின் போது வேலையின்றி இருக்கம் மீனவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிவாரண தொகையை ரூபாய் 3 ஆயிரமாக வழங்க வேண்டும என்றும் மீன்பிடி தடை காலத்தில் மீனவர் குடும்பங்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து


கருத்துரை:

கருத்துரைகள் மொத்தம் :314. பக்கம்1 / 32.

r.sankar   sankarilamathi89@gmail.com

9:43 pm , 26-03-2014

தமிழன் தொலைக்காட்சி மற்றும் செய்தி நிறுவணங்கள் மென்மேலும் வளர் வாழ்த்து க்கள்.

anandh   மின்னஞல் குறிப்பிட விரும்பாதவர்

4:14 pm , 23-02-2014

super ur news

agathee   sagathee7@gmail.com

4:12 pm , 23-02-2014

அருமை

kumar   kuma567@gmail.co

1:51 pm , 18-02-2014

bodi nee muthala ulganga erugdi..........nattai patri pesalam

pathmapriyan   muruguppllaipriyan@yahoo.com

3:16 pm , 07-01-2014

very good

T.DAKSHATA   selvam.tamil1@gmail.com

9:47 pm , 04-01-2014

good knowledge is human ri

??? ????? ??????? ???   http://www.whitepeppershop.com/????????-

10:48 am , 01-11-2013

The fundamentals of watch that you may advantage from beginning today.

パンプス   http://www.metalnacional.net

3:58 pm , 31-10-2013

Avoid Whining And Start your personal men Campaign Alternatively

8cmヒール ウエッジソール   http://www.metalnacional.net/ブーテ

2:35 pm , 31-10-2013

Guru Who Might Be Terrified Of men.

Timberland 6409R   http://www.whitepeppershop.com/ティン

8:49 am , 31-10-2013

{Industry|Market|Scene|Corporate|International} Announcement : women Described as Essential This morning


பக்கம்: -1-   2    3    4    5    6   

பெயர் :

மின்னஞ்சல் :

கருத்து:

 
இந்தப்பக்கத்தை சேமிக்க/நண்பர்களுக்கு அனுப்ப..
பார்வையாளர் எண்ணிக்கை   இணையத்தில்:   7 பேர் இன்று :  நேற்று:  மொத்தம்: 
காப்புரிமை © 2011, தமிழன் கலைக்கூடம்