ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12 ஆம் தேதி காவிரி டெல்டா பாசணத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும். ஆனால் இந்த ஆண்டு காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பின்படி கர்நாடகாவிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படாததால், அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளதையடுத்து அணை திறக்கப்படவில்லை. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவதை யொட்டி மேட்டூரிலிருந்து காவிரி நீர் வரும் 28 – ஆம் தேதி திறந்து விடப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு சாகுபடி பணிகளை மேற்கொள்வதற்காக தண்ணீர் விடப்படும் என்றும் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
மக்களவையில் தமிழில் பேச அனுமதி வழங்க மக்களவை சபாநாயகர் மீராகுமாரிடம் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அனுமதி கோரியிருந்தார். இது குறித்து பரிசீலித்து முடிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்த நிலையில் நாளை மறுநாள் கூடும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தமிழில் பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லியில் பேட்டியளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர்; நாரயணசாமி, நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் மாநில மொழிகளில் பேச அனுமதி வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் மக்களவை விதிகளில் இதுகுறித்து திருத்தம் செய்யப்படும் என்றும் நாளை மறுநாள் தொடங்கப்படும் மழைக்கால கூட்டத் தொடரில் அமைச்சர்கள் தங்கள் மாநில மொழியில் பேச அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் 11 – ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நெல்லை வந்திருந்தார். அப்போது தாமரபரணி ஆ;றறில் தொல்.திருமாவளவன் தமது கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க. தலைமையிலான கூட்டணி நல்லிணக்கத்துடனும், ஒற்றுமையுடனும் உள்ளது என்றும், தி.மு.க.வுடனான கூட்டணி சிதையும் என்று எதிர்ப்பார்ப்பது வெறும் கனவுதான் என்று தெரிவித்தார். மேலும் வரும் செப்டம்பர் 27 – ஆம் தேதி தமிழர் இறையாண்மை மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
69 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பும், அதன் விளைவுகள் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவை சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு, சிறப்பு விருந்தினராக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது சமூக நீதிக்காக போராடுவதற்கு, பெரியார் இருந்த இடத்தில் இன்று யாரும் இல்லை என்றும் வழக்கறிஞர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர்; தெரிவித்தார். மேலும் அனைத்து கட்சிகளும் ஒன்றுசேர்ந்து செயல்பட்டால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாம் என்றும் இதற்கு 69 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முக்கியமானது என்றும் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக உணவுத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கலந்துகொண்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் நலவாரிய குடும்பங்களுக்கு 2 கோடியே மூன்று லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது கடந்த ஆட்சியில் 60 ஆயிரம் உறுப்பினர்களுக்கு கடன் வழங்கப்பட்டது என்றும், ஆனால் தி.மு.க. ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 2 லட்சம் பேருக்கு ரூபாய் 78 கோடி வழங்கப்பட்டது. மேலும் 31 நலவாரியங்கள் உருவாக்கப்பட்டு, 500 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். இ;ந்த விழாவில் கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் நலவாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். நகர்மன்றத் தலைவர் திருமகன், அலுவலர் சுந்தரவடிவேலு, சங்க நிர்வாகி பொன்முடி உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.