 |
|
சென்னை கிண்டியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் நினைவிடத்தில் அனையாவிளக்கு அமைக்கப்படும் என்ற முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று காமராஜர் நினைவிடத்தில் அனையாவிளக்கு ஏற்றி வைத்து முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, செய்தித்துறை அமைச்சர் பரிதிஇளம்வழுதி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, டி.யசோதா, குமரிஅனந்தன், சென்னை மேயர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
|
 |
|
தேசிய வளர்ச்சிக்குழுவின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 11 – வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகள், அவற்றின் வளர்ச்சி, குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் மன்மோகன்சிங், நாட்டின் பல பகுதிகளில் பருவமழை உரிய காலத்தில் பெய்துள்ளது என்றும், உணவு உற்பத்தி அதிகரித்து விலை குறையும் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் உணவு பணவீக்கம் ஆறு விழுக்காடு அளவிற்கு குறைய வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களில் முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். நாளை தொடங்கும் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில் விலைவாசி பிரச்சினை குறித்து எதிர்கட்சிகள் எழுப்புகிற சூழலில், விலை உயர்வு குறித்து பிரதமர் மன்மோகன்சிங் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
|
.jpg) |
|
டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான தேசிய வளர்ச்சிக்குழு மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், நீர் பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் உள்ளது என்றும், வேளாண் உற்பத்தியை நவீன முறைகள் மூலம் பெருக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைப்பதற்கான திட்டங்களை மாநில அரசு வகுத்துள்ளது என்றும், தென் மாநிலங்களுக்கு இடையேயான நதிகளை இணைக்க வேண்டும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்த முயற்சிக்க வேண்டும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
|
 |
|
அரியானா மாநிலத்தில் பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல், நாட்டின் முன்னனேற்றத்திற்கும், வளர்ச்சிக்குமான இளைஞர்களின் பங்களிப்பு மாணவ பருவத்தில் தொடங்க பள்ளிகள் உறுதுணையாக இருக்கும் என்றார். மேலும் மாணவர்களை நாட்டின் கலாச்சார பண்பாட்டை மதிப்பவர்களாகவும், சமூக அக்கரை உள்ளவர்களாகவும், பள்ளிகளில் உருவாக்க வேண்டும் என்றும், இதற்காக ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் கேட்டுக் கெண்டுள்ளார்.
|
|