 |
|
சென்னையில் காலி இடங்களில் உள்ள ரூ.1500 கோடி சொத்துக்கள் ஒரு மாதத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என, மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசிய மேயர் சுப்பிரமணியன், சென்னை திறந்தவெளி காலி இடங்கள் 16 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 98 இடங்கள் இதே போல் இருக்கின்றன. அதை ஆய்வு செய்து வருகி றோம். 650 முதல் 700 கிரவுண்ட் நிலம் திறந்த வெளி இடங்களாக உள்ளன. இதன் மதிப்பு ரூ. 1500 கோடி ஆகும். இந்த சொத்துக்கள் பல இடங்களில், பல்வேறு நிலைகளில் இருந்து கொண்டிருக்கிறது. யாரிடம் இருந்தாலும் இந்த சொத்துக்களை இன்னும் ஒரு மாதத்தில் மாநகராட்சி பறிமுதல் செய்யும். பெரிய திறந்த வெளி இடங்களில் பூமிக்கு அடியில் கார் பார்க்கிங் கட்டி அதன் மேல் பகுதியில் விளையாட்டு திடல், பூங்கா எதிர்காலத்தில் கட்டப்படும் என்றார். |
 |
|
நேற்றைய தினம் பீகாரி;ல் பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் சுமார் பனிரெண்டு மணிநேரம் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஏழுபோலீஸார் உயிரிழந்தனர். நான்கு போலீஸாரை, மாவோயிஸ்டுகள் பிணைக் கைதிகளாக பிடித்துச்சென்றுள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களது முக்கியத் தலைவர்கள் பனிரெண்டுபேரை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் இல்லையேல் நான்கு போலீஸாரையும் சுட்டுக்கொல்லப்போவதாகவும் மாவோயிஸ்ட்டுகள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். இதனால் பீகாரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் நித்தீஷ்குமார், சக அமைச்சர்களை கூட்டி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார். மாவோயிஸ்டுகளின் நாளை காலையுடன் முடிகிறது. ள
|
 |
|
இன்று மக்களவையில் கருப்புப்பணம் சம்மந்தமான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ஸ்விட்சர்லாந்தில் மட்டுமின்றி ஜெர்மனி மற்றும் மெக்ஸிகோவிலும்கூட ஏராளமான கருப்புப்பணத்தை இந்திய செல்வந்தர்கள் பதுக்கிவைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் சுமார் 70 லட்சம் கோடி ரூபாய் வெளிநாடுகளில் முடக்கப்பட்டிருப்பதாகவும், ஸ்வீஸ் வங்கியில் இருந்து இந்திய பணத்தை மீட்பது மிகவும் சிரமாமன ஒன்று என்றும் கூறியஅவர், ஸ்வீஸ் நாட்டின் சட்டம் மிகக்கடுமையாக இருப்பதாகவும் எனவே இந்திய அரசு அப்பணத்தை மீட்பதில் மிகவும் சிக்கல் உள்ளதாகவும் பிரணாப்முகர்ஜி தெரிவித்தார்.
|
 |
|
கொழும்பு சென்றுள்ள நிருபமாராவ், வவுனியா. கிளிநொச்சி, யாழ்பாணம் ஆகிய பகுதிகளின் முகாம்களில் வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை நேரில் சென்று சந்திக்கவுள்ளார். மீள் குடியேற்றப்பணிகள் எந்தளவிற்கு நிகழ்ந்துள்ளன என்பதை அந்நாட்டு உயரதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க உள்ளார்.
இலங்கையில் உள்ள தமிழர்கட்சித் தலைவர்களையும், அதிபர் ராஜபக்ஷேவையும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே மூன்றாவது முறையாக அதிபர் பதவியை ராஜபக்ஷே ஏற்கும் வகையில் இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம்கொண்டுவர உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் இலங்கை நாடாளுமன்றத்தில் அடுத்தமாதம் எட்டாம் தேதி மேற்கொள்ளப்படவிருக்கிறது.
|
 |
|
கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் பதினெட்டாவது இவாஞ்சலின் நினைவு தினத்தை முன்னிட்டு தென்னிந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம், ஆகிய மாநிலங்களில் உள்ள கல்லூரி சேர்ந்த வீரர் - வீராங்கணைகள் கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழக கலையரங்கில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டிக்கு பல்கலைக்கழக வேந்தர் பால்.தினகரன் தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு விளையாட்டுப்போட்டிகளை துவக்கிவைத்து உரையாற்றினார்.
அப்போது இந்தியாவிலேயே கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் மாநிலம் தமிழகம்தான் என்றும் இதற்கென 2010 – 2011 ஆண்டின் மாநில பட்ஜெட்டில் ரூபாய் 63 ஆயிரத்து 91 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் துணைவேந்தர் பால்அப்பாசாமி, பதிவாளர் ஆனிமேரி மற்றும் மாணவ – மாணவியர், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
|
 |
|
இதுகுறித்து அவர் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமல் காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பதவிஉயர்வு உட்பட தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று கோட்டையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்த சத்துணவு ஊழியர்கள் அறிவித்திருந்தனர்.
ஆனால் அவர்களை சென்னை வரவிடாமல் வெளிமாவட்டங்களிலேயே தடுத்தி நிறுத்தி இரவு நேரங்களில் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். அதனையும் மீறி சாலைமறியலில் ஈடுபட்டோரை கடுமையாக தாக்கி கைதுசெய்துள்ளனர்.
சத்துணவு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தாமல் அடக்குமுறையை ஏவிவிட்டிருக்கும் கருணாநிதியின் இந்தப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று ஜெயலலிதா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் கோடிக்கணக்கான அரசுப்பணத்தை செலவழித்து தன்னல குடும்ப மாநாடு நடத்தும் கருணாநிதிக்கு, எம்.ஜி.ஆர். ஆட்சிகாலத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என்பதற்காக சத்துணவு ஊழியர்களை அலட்சியப்படுத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாதது வருத்தம் அளிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
|
 |
|
மத்திய தொழில்பாதுகாப்புப் படையின் முப்பதாறாவது காவலர் பயிற்சிவிழா, அரக்கோணம் அருகேயுள்ள தக்கோலம் மத்திய தொழில்பாதுகாப்புப் படையின் காவலர் பயிற்சி மைதானத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து 809 காவலர்கள் கடந்த 28 வாரமாக இந்த மைதானத்தில் பயிற்சிபெற்றனர். இதன்நிறைவுவிழா இன்று நடைபெற்றது. முப்பதாறாவது காவலர் பிரிவில் அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் காவலர் வேத்பிரகஸ்சிங் முதலாவது இடம்பிடித்தார். துப்பாக்கிச்சுடும் போட்டியில் ஜாதவ்மகேஷ்அசோக் என்ற காவலர் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த பயிற்சியின் நிறைவுவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட டிஜி.என்.ஆர்.தாஸ் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதில் காவலர் பயிற்சிமையத்தின் முதல்வர் செல்லதுரை மற்றும் பயிற்சிமுடித்த காவலர்களின் பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக பயிற்சி பெற்ற வீரர்களின் வீரதீர சாகச நிகழ்ச்சி மற்றும் கலைநிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
|
 |
|
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி, தைலாபுரம் தேசிய நெடுஞ்சாலையருகே அமைந்துள்ள பண்ணைவீட்டில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் பரமசிவம். இவரது மனைவி கிருஷ்ணபூபகி. பண்ணை வீட்டில் இருந்த பரமசிவத்தை 10-க்கும் மேற்பட்ட மர்மநபர்கள் இரும்புகம்பியால் தாக்கிவிட்டு பின்னர் கணவன் -மனைவியை கட்டிப்போட்டுவிட்டு 25 சரவன் நகை மற்றும் ரூபாய் ஒன்றரை லட்சம் ரொக்கம், ரூபாய் பலகோடி மதிப்புள்ள ஆவணங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளைச்சம்பவம் அப்பகுதியில் மக்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
|
 |
|
மதநல்லிணக்கம், பன்முகக் கலாச்சாரம், அமைதிக்கான கல்வி குறித்து உலகளாவிய மாநாடு கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழத் துணைவேந்தர் அருணாசிவசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி, சட்டமன்ற கொறடா சக்கரபாணி, ஆசிய பண்பாட்டு கழக அயர்லாந்து பேராசிரியர் பெலிக்ஸ்வில்பிரட் மற்றும் ஹில்டாதேவி, பதிவாளர் மணி, ஆசிய பண்நாட்டு கலாச்சார மைய தலைமைச் செயலாளர் பூனோரா உட்பட பேராசிரியர்கள், மாணவ – மாணவியர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
|
 |
|
நாகையில் பழைய பேருந்து நிலையம் அருகே புதிதாக துவங்கப்பட்டுள்ள ஆவின் உற்பத்திப் பொருள் விற்பனை மையத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் விஜயன் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.
இதில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் பூங்குன்றன், தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், நகரசெயலாளர் வீராசாமி, பொதுக்குழு உறுப்பினர் சச்சாமுபாரக், நகர் மன்ற உறுப்பினர் ஸ்ரீதர்கவுதமன், நகர்மன்றத் துணைத் தலைவர் மாரிமுத்து உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
|
 |
|
நாகையில் விடுதலைச்சிறுத்;தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாள்விழா, கட்சியின் கொடியேற்று விழா, பல்வேறு கட்சியினர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியில் இணையும் விழா ஆகிய முப்பெரும் விழா, ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
விழாவின் போது கொட்டும் மழையென்றும் பாராமல் விடுதலைச்சிறுத்தை கட்சியினர் ஊர்வலமாக சென்று மாவட்டத் துணைச் செயலாளர் கதிர்நிலவன் தலைமையில் கட்சிக்கொடியேற்றப்பட்டது.
இந்த முப்பெரும் விழாவில், ஒன்றிய அமைப்பாளர் பேரறிவாளன், ஒன்றியச் செயலாளர் அன்பழகன், கட்சியின் மூத்த உறுப்பினர் மீனாட்சி சுந்தரம், துணைச்செயலாளர் பிரபாகரன், தொண்டரணி செயலாளர் கனியமுதன், சமூகநல்லிணக்கப் பேரவைச் செயலாளர் கண்ணையன், மீனவரணிச் செயலாளர் வெங்கடேசன், மாவட்டத் துணைச் செயலாளர் பிரபாகரன், இளஞ்சிறுத்தை எழுச்சிப்பபாசறை மாவட்டத்துணைச் செயலாளர் அறிவழகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
|
 |
|
தஞ்சாவூர் தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்ற இந்த செயற்குழுக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் உட்பட ஏராளமான சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செயற்குழுக் கூட்டத்தின்போது, தஞ்சையில் வளர்ச்சிப்பணியினை விரைந்து முடிக்கவேண்டும், தென்மாவட்டங்களில் சாதிக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள தேவேந்திர குல மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும், ஐ.ஏ.எஸ்.அதிகாரி உமாசங்கரை பதவிநீக்கம் செய்தததை திரும்பப்பெறவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
|
 |
|
கச்சச்தீவு பகுதியில் தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்களவையில் திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இல்லையெனில் கச்சத்தீவை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்றும் திமுக அறிவுறுத்தியுள்ளது. மக்களவை இன்று தொடங்கியதும் இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் அண்மையில் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானம் குறித்து பேசிய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, கச்சத்தீவு மீதான தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு இலங்கையுடனான உடன்படிக்கையை, மறு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய இலங்கை கடற்பகுதியில் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்காக கடலோர காவல்படையின் ரோந்து அதிகரிக்கப்பட வேண்டும். மிக முக்கியமாக ஆன்லைன் முறையில் பிரச்சனைகளை உடனுக்குடன் பேசித் தீர்க்க மத்திய அரசு, தமிழக அரசு, இலங்கை அரசு மற்றும் தமிழக மீனவர்கள் கொண்ட ஒருங்கிணைந்த அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இல்லையெனில், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண இயலாது. இல்லாவிட்டால் கச்சத்தீவை இந்தியா திரும்ப பெறவேண்டும் என்றனர். தொடர்ந்து பேசிய தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் கச்சத்தீவை இந்தியா திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்துமாக் கடல் பகுதியை நாம் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தேவையான நடவடிக்கைகளும் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும். இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாடும் மீனவர்களின் நலனும் பாதுகாக்கப்படும் என அவையில் நான் உறுதிப்படுத்துகிறேன்.
தற்போது இலங்கை சென்றுள்ள வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ், தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் பேசுவார். வரும் அக்டோபர் மாதம் நான் இலங்கை செல்ல இருக்கிறேன். அப்போது இலங்கை அரசுடன் தமிழக மீனவர் பிரச்சனை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார் |
 |
|
மத்திய, மாநில மந்திரிகள் வெளிநாடுகளுக்கு செல்வது சமீப காலமாக அதிகரித்துள்ளது. சில மந்திரிகள் குறிப்பாக சரத்பவார், அனந்த சர்மா ஆகியோர் அடிக்கடி வெளிநாடு செல்வது தெரிய வந்தது. அமைச்சர்களின் வெளிநாட்டு மோகத்தை கட்டுப்படுத்த பிரதமர் மன்மோகன் சிங் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அவரது உத்தரவின் பேரில் மத்திய, மாநில மந்திரிகள் வெளிநாடு செல்வதை முடக்க புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய, மாநில மந்திரிகள் தங்களது தனிப்பட்ட பயணம் குறித்தும் பிரதமர் அலுவலகத்திடம் முன் கூட்டியே தகவல் கொடுத்து ஒப்புதல் பெற வேண்டும். தனிப்பட்ட பயணம் பற்றிய முழு விவரங்களையும் தரவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மத்திய, மாநில மந்திரிகள் வெளிநாட்டுக்கு செல்வதை தவிர எந்த தேதியில் திரும்பி வரஉள்ளனர் என்பதையும் சரிபார்த்து கண்காணிக்க பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டுள்ளார். இது தவிர வெளிநாட்டுக்கு போகும் ஒவ்வொரு தடவையும், இதற்கு முன்பு எத்தனை தடவை வெளிநாட்டுக்கு சென்று வந்துள்ளார் என்ற தகவலையும் மந்திரிகள் கொடுக்க வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தி உள்ளார். மேலும் குறிப்பிட்ட ஒரே நாட்டுக்கு எந்த மந்திரியாவது அடிக்கடி சென்று வந்தால், அது பற்றி தன் கவனத்துக்கு கொண்டு வருமாறும் பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டுள்ளார். பிரதமரின் இந்த உத்தரவு அமைச்சரவை செயலகம் மூலம் அனைத்து மந்திரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. |
 |
|
சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வருவது தற்போதைக்கு சாத்தியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றம் மக்களவையில் இந்த விவகாரம் குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளின் வரவு செலவு விபரங்களை வேறு எந்த நாட்டுக்கும் வழங்கக் கூடாது என்பது அந்நாட்டின் கடுமையான சட்டம். சுவிட்லாந்து நாட்டின் சட்ட திட்டங்கள் கடுமையாக உள்ளது. எனவே முதலீடு செய்துள்ள பணம் குறித்த தகவல்களை பெறுவதில் சிக்கல் உள்ளது. கடந்த 1945ஆம் ஆண்டு ஜெர்மனியின் நாஜித் தலைவர்களின் வங்கி கணக்குகளை சுவிஸ் வங்கிகள் வழங்கியது போன்ற ஒரு நடவடிக்கை இதற்கு முன்போ, அதன்பிறகோ தற்போதுவரை மேற்கொள்ளப்படவில்லை. சுவிட்லாந்து நாட்டின் சட்ட திட்டங்கள் கடுமையாக உள்ளதால், அங்கு முதலீடு செய்துள்ள இந்தியர்களின் பணத்தை மீட்டு கொண்டு வருவது தற்போதைக்கு சாத்தியமில்லை.
ஆனால் ஜெர்மனி, மெக்சிக்கோ உள்ளிட்ட நாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்பது குறித்து மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது என்றார். |
 |
|
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனப் படையினர் குவிக்கப்பட்டு வருவது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். சீனப்படையினர் குவிவது உண்மையாக இருந்தால் அது நிச்சயம் பெரும் கவலைக்குரிய விஷயாகும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. காஷ்மீரின் கதை பெரும் சோக வரலாற்றைக் கொண்டது. இந்தியா, பாகிஸ்தான் என நாடு இரண்டாக பிரிவதற்கு முன்பு காஷ்மீரை ஆண்டு வந்தவர் இந்து ராஜாவான ஹரிசிங். இந்தியாவும், பாகிஸ்தானும் பிரிந்தபோது எங்கு போவது என்பது தெரியாமல் ஹரிசிங் குழம்பிக் கொண்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் படையினர், அதிரடியாக காஷ்மீருக்குள் புகுந்தனர். இதையடுத்து இந்தியாவுடன் காஷ்மீர் சாம்ராஜ்யத்தை இணைப்பதாக அறிவித்தார் ஹரிசிங். அப்படி வந்து சேர்ந்த காஷ்மீர்தான் நம்மிடம் இப்போது இருப்பது. அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளதுதான் இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எனக் கூறப்படும் கில்ஜிட், பல்திஸ்தான் ஆகியவை. இதற்கு ஆசாத் காஷ்மீர் என பெயர் வைத்துள்ளது. இந்தப் பகுதியிலிருந்து ஒரு பகுதியை அது 1963ம் ஆண்டு சீனாவுக்கு தானமாக கொடுத்தது. இது போக சீனாவும் ஒரு பகுதி காஷ்மீரை ஆக்கிரமித்துக்கொண்டு அக்ஷய் சின் என பெயர் வைத்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இப்படி நம்மிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதிகளை இதுவரை நம்மால் திரும்பப் பெற முடியவில்லை. இந்த நிலையில் கில்ஜிட்-பல்திஸ்தான் பகுதிகளில் சீனப்படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். இது இந்தியாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த செய்தியை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், சீனாவின் மக்கள் ராணுவத்தினர் கிட்டத்தட்ட 11,000 பேர் வரை கில்ஜிட் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் வழியாக வளைகுடாக்களுக்குப் போவதற்கு வசதியாக இவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் கூறுகையில், பத்திரிக்கைச் செய்திகளைப் பார்த்தோம். இதுகுறித்து தனிப்பட்ட முறையில் விசாரித்து வருகிறோம். ஒருவேளை இது உண்மையாக இருக்குமானால் மிகவும் கவலைக்குரியதாகும். நமது நாட்டின் பாதுகாப்பையும், இறையாண்மையையும் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்கும் என்றார்.
|
 |
|
கூடுவாஞ்சேரி அருகே ரியல் எஸ்டேட் அதிபரை 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு ரூ. ஆறரை லட்சம் மதிப்புள்ள நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றள்ளது. கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் பரமசிவம் (46). இவர் தைலாவரம் ஜி.எஸ்.டி. சாலை அருகேயுள்ள உறவினர்களுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் தனது மனைவி பூவதி (35) மற்றும் மகள், மகன்களுடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு அந்த பண்ணை வீட்டிற்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் பரமசிவத்தின் தலையில் அரிவாளால் வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் மயக்கம் அடைந்து விட்டார். மேலும், அந்த கும்பல் பரமசிவத்தின் மனைவியையும் அடித்து உதைத்தனர். அதன் பிறகு வீட்டில் இருந்து 29 சவரன் தங்க நகைகள், ரொக்கப்பணம் ரூ.2 லட்சம், வெள்ளி பொருட்கள் மற்றும் பல லட்சம் மதிப்புள்ள நில பத்திரங்கள் ஆகியவற்றை அந்த கொள்ளை கும்பல் திருடிக் கொண்டு அங்கிருந்து காரில் தப்பிச் சென்று விட்டது. இந்த சம்பவம் குறித்து பரமசிவம் போலீசில் புகார் கொடுத்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை தொடர்பாக கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது |
 |
|
இறைமை உள்ள ஒரு இனத்துக்காகப் போராடிய தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு அரசியல் அமைப்பே. அதன் உறுப்பினர்களுக்கு அடிப்படை உரிமையை மறுக்கக் கூடாது என நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வெளியிட்டுள்ளது. 1992-ல் புலிகளுக்கு ஆயுதம் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றை இந்திய கப்பல் படை இடைமறித்து சென்னை நோக்கி செலுத்தி வந்தது. இதில்தான் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கிட்டு இருந்தார். சென்னைக்கு அருகில் இந்தக் கப்பல் கொண்டுவரப்பட்டதும் கப்பல், அதிலிருந்த ஆயுதங்கள் மற்றும் புலிகள் அமைப்பின் தலைவர்களை சிறைப்படுத்த இந்திய கப்பல் படையினர் முயன்றபோது, கப்பலை வெடி வைத்துத் தகர்த்தனர் புலிகள். இதில் கிட்டு உள்ளிட்டோர் இறந்தனர். மூவர் மட்டும் கடலில் குதித்துத் தப்பினர். அவர்களை இந்தியா கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் அவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2001-ல் தண்டனை முடிந்ததும், அவர்களை சிங்கப்பூருக்கு அனுப்பியது இந்தியா. பின்னர் அவர்கள் சிங்கப்பூரிலிருந்து நியூஸிலாந்துக்கு சுற்றுலா விசாவில் சென்றனர். 2002-ல் அகதி உரிமை கோரி அங்கு விண்ணப்பித்தனர்.
ஆனால் இதனை நிராகரித்த நியூஸிலாந்து அரசு அவர்களில் இருவரை நாடு கடத்தியது. மூன்றாமவர் மட்டும் அரசின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த நியூஸிலாந்து நீதிமன்றம் மேற்கண்ட முன்னுதாரணமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அகதி அந்தஸ்து கோரிய நபர், புலிகளின் ஆயுதக் கப்பலை செலுத்திய மாலுமி என்றும், தனது செயலை அதை ஒப்புக்கொள்வதாகவும் அரசு தாக்கல் செய்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவருக்கு இந்திய அரசு வழங்கிய தண்டனை மற்றும் இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டி அகதி உரிமையை மறுத்தது நியூஸிலாந்து அரசு. இதனை விசாரித்த நீதிபதி, இலங்கை அரசு இன அழிப்பில் ஈடுபடும் பட்சத்தில் தமிழர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை படைத்தவர்களே என்று குறிப்பிட்டார். மேலும் இந்திய நீதிமன்றத் தீர்ப்புகளையும் அவர் இந்த விசாரணையின் ஒரு அங்கமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று நிராகரித்து விட்டார். குறிப்பிட்ட அந்தக் கப்பல் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்களை ஏற்றிச் சென்றது உண்மையாகவே இருந்தாலும், புலிகள் தங்கள் மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பு. அவர்களுக்கு அத்தியாவசியமான பொருள்களைத்தானே அந்தக் கப்பல் ஏற்றிச் சென்றது? இதில் தவறு காண வேண்டியதில்லை. அந்தக் கப்பல் புலிகளுக்குப் போய்ச் சோராத நிலையில் அவர்களாலே மூழ்கடிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் அரசியல் குற்றமோ, பொதுமக்களுக்கு ஊறு விளைவித்த குற்றமோ இல்லை என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அரசியல் அமைப்பு:
மேலும் தமது தீர்ப்பில், "இறைமை உள்ள இனம் என்ற அடிப்படையில் தமிழர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள முடியும். அதற்காகவே விடுதலைப் புலிகள் போராடினர். புலிகள் ஒரு போராட்ட அமைப்பு. அது அரசியல் ரீதியாக தற்போது இயங்கி வருகிறது" என்றும் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட அந்த தமிழருக்கு நியூசிலாந்து அரசு உடனே அகதிகள் அந்தஸ்து வழங்கவேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக ஆஸ்திரேலியா பட்டியலிட்டபோது, நியூசிலாந்தும் அதற்கான முயற்சியில் இறங்கியது. அப்போது நியூசிலாந்து தமிழர்கள் மேற்கொண்ட பெரும் போராட்டங்களால் அந்த முயற்சி நிறுத்தப்பட்டது. இன்று புலிகளுக்கு தடை விதிக்காத முக்கிய நாடுகளுள் நியூஸிலாந்தும் ஒன்று. உலகில் தமிழர்கள் பெருமளவில் வாழும் பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இன்னும் புலிகள் மீது தடைகள் உள்ளன. உலகத் தமிழர்களின் தாயகமான இந்தியாவில் தடை நீடிக்கிறது. தற்போது நியூசிலாந்தில் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை முன்னுதாரணமாகக் கொண்டு, புலிகள் இயக்கத்தை தடைசெய்துள்ள நாடுகளில் அத் தடையை நீக்கிட முயற்சிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தமிழ் அமைப்புகள் கருதுகின்றன. இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்பு தவறானது என்பதை கிட்டத்தட்ட வெளிப்படையாகவே உரைத்திருக்கிறது நியூஸிலாந்து உச்ச நீதிமன்றம். எனவே இதை மேற்கோள் காட்டி, புலிகளுக்கு எதிரான தடையை எதிர்த்து இந்தியாவிலும் வாதாட தமிழ் அமைப்புகள் முயலலாம் எனக் கருதப்படுகிறது. மேலும் புலிகள் தங்கள் ஆயுதக் கப்பலை மூழ்கடித்தது, அரசியல் குற்றமோ, பொது நலனுக்கு எதிரான குற்றமோ அல்ல என தெள்ளத் தெளிவாக நியூஸிலாந்து நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. புலிகள் வல்வெட்டித் துறைக்கு கொண்டு சென்ற கப்பலை இடைமறித்தது இந்திய கப்பல் படைதான். தங்களுக்குச் சொந்தமான பொருளை புலிகள் மூழ்கடித்ததில் என்ன குற்றம் காண முடியும்? அந்த ஆயுதங்களைக் கொண்டு இந்தியாவை அவர்கள் தாக்க முயலவில்லையே என்றும் நீதிபதிகள் கருத்து வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது! |
 |
|
அயோத்தில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது பற்றிய வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வரும் 15ஆம் தேதி தீர்ப்பு வெளியாவதையொட்டி, அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்றது வருகின்றன. ரயில் பயணிகளின் உடமைகள் முழுமையாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அயோத்தில் பிரச்சனைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு கடந்த 25 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அலகாபாத் நீதிமன்றத்தில் லக்னோ கிளையில் வரும் 15ஆம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ளது. இதையடுத்து அயோத்தி, லன்னோ உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ப்ôதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீர்ப்பு வெளியாகும் போது எந்த அசம்பாவிதமும் ஏற்பாடமல் இருக்க, முழுமையான பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண வேண்டும் என, இஸ்லாம் அமைப்பினர் பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்தியுள்ளனர். அயோத்தில் பிரச்சனைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட சட்டம் கொண்டு வர வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ள விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர், அலகாபாத் நீதிமன்றத்தில் வெளியாகும் தீர்ப்பை பொறுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்
|
 |
|
கோவை சித்தாபுத்தூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முல்லைப் பெரியாறு அணையை இடிப்பதற்கான, முயற்சிகளை கேரள அரசு செய்து வருகிறது. அப்படி அணை இடிக்கப்பட்டால், தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும். முல்லைப் பெரியாறு விஷயத்தில் தமிழக மக்களுக்கு முதல்வர் கருணாநிதி துரோகம் செய்துவிட்டார். நிருபமா ராவ் இலங்கை செல்வது ஒரு கண்துடைப்பு நாடகம்தான். உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து, கொலைகாரன் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும்போது, மத்திய அரசு போர் குற்றவாளியாக ஆக்குவதை தடுப்பதற்காக பல்வேறு விதமான முயற்சிகளை செய்து வருகிறது. அதில் ஒரு முயற்சிதான் நிருபமா ராவின் பயணம். அதிமுக கூட்டணி மிக பலமாகத்தான் இருக்கிறது. கூடவே மக்களும் இணைந்திருக்கிறார்கள். கோவை மற்றும் திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தை பார்த்தால் தெரியும். ஆளும் திமுக அரசு போட்டிக் கூட்டம் நடத்துவதாக, கூட்டிய கூட்டம் எவ்வளவு பெரிய தோல்வியில் முடிந்தது என மக்கள் பார்த்தார்கள் என்றார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஏற்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அத்தைக்கு மீசை முளைத்தால் பார்ப்போம் என்றார். |
 |
|
தமிழ் வழிக்கல்வி படித்தாலும் சாதிக்க முடியும். தமிழில் படித்த நமக்கு மற்றவர்களை விட சுயசிந்தனை அதிகம் என்று கூட சொல்ல முடியும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார். கும்மிடிப்பூண்டி அடுத்து உள்ள தனியார் கல்லூரியில் நடந்த விழாவில் பேசிய அவர், மாணவர்கள் பெற்றோர்களை முன்நிறுத்தி வாழ்க்கையில் செல்ல வேண்டும், தற்போது நடைபெறும் விழா போல நான் கல்லூரியில் சேரும் போது ஏதும் இல்லை. அப்போது எங்களை வரவேற்றது ராக்கிங்தான். அப்படியில்லாமல் கல்லூரி நிர்வாகமே மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது பாராட்டுக்குரியது. இது போட்டிகள் நிறைந்த உலகம். நன்றாக படித்து மாணவர்கள் முன்னுக்கு வரவேண்டும். வெளிநாட்டினர் இதுவரை 69 விண்கலன்களை சந்திரனை நோக்கி அனுப்பியிருந்தாலும், 70 வதாக சென்ற சந்திரயான் மூலம் மற்றவர்கள் செய்யாததை எங்களால் செய்ய முடிந்தது. நிலவில் நீர் இருக்கிறது என்பதை மட்டும் அல்ல, நிலவில் நீர் உருவாகிறது என்று ஒரு சரித்திர பூர்வமான உண்மையை சந்திரயான் கண்டுபிடித்து சாதனை படைத்தது. தமிழ் வழிக்கல்வி படித்தாலும் சாதிக்க முடியும். தமிழில் படித்த நமக்கு மற்றவர்களை விட சுயசிந்தனை அதிகம் என்று கூட சொல்ல முடியும் என்றார் |
 |
|
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்லைகக்கழகத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி நூர்ணிக்கார், 3ஆம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வருகிறார். கல்லூரி விடுதியான அறை எண் 203ல் தங்கி படித்து வரும் அவர், இன்று வகுப்புக்கு வரவில்லை. எனவே சக மாணவிகள், நூர்ணிக்கார் வகுப்புக்கு வரவில்லை என அறிந்ததும், அவரது அறைக்குச் சென்றுள்ளனர். அப்போது நூர்ணிக்கார் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் மாணவிகள் தெரிவித்துள்ளனர். விடுதி காப்பாளர் மாணவி தற்கொலை சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அண்ணாமலை நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். |
 |
|
தமிழுக்கு ஐயாயிரம் ஆண்டு கால வரலாறு உண்டு. வரலாற்றை நோக்கும்பொழுது தமிழுக்கும் தமிழனுக்கும் காலந்தோறும் இடையூறுகள் ஏற்பட்ட வண்ணம் இருந்துள்ளதை அறியலாம் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார். புதுச்சேரித் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையினர் தனித்தமிழில் நாளிதழ் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு நிதி திரட்டினர். தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் முதன்மைப் பொறுப்பாளராக விளங்கிய முனைவர் இரா.திருமுருகனும், பொருளாளர் தி.ப.சாந்தசீலனார் அவர்களும் அடுத்தடுத்து இயற்கை எய்தியதால் தனித்தமிழ் நாளிதழுக்குத் திரட்டப்பட்ட தொகயைத் தமிழ், தமிழின வளர்ச்சிக்குத் தொடர்ந்து தொண்டாற்றும் தென்செய்தி இதழுக்கு வழங்கத் தீர்மானித்தனர். அவ்வகையில் தென்செய்தி இதழாசிரியர் பழ.நெடுமாறன் அவர்களிடம் இரண்டரை இலக்கம் உருவா நிதியினை இன்று (30.08.2010) மாலை புதுச்சேரி யில் நடைபெற்ற விழாவில் அறக்கட்டளையின் தலைவர் செம்பியன், பொருளாளர் தி.ப.சா.நர்மதா, முனைவர் தமிழப்பன், மு.வ.பரணன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் ஒன்றுகூடி வழங்கினர். நிதியினை ஏற்றுக்கொண்ட பழ.நெடுமாறன் ஒருமணி நேரத்திற்கும் மேலாக அரியதோர் உணர்வுரையாற்றினார். அவர் உரையிலிருந்து சில பொறிகள்:
தமிழ்நாடு என்ற பெயரில் மதுரையிலிருந்து திரு.தியாகராச செட்டியார் தமிழில் நாளிதழ் நடத்தினார். அந்த இதழ் இடையில் நின்றாலும் அதன் தாக்கம் தமிழ் இதழியல் வரலாற்றில் காணப்படுகின்றது. இந்த இதழில் தமிழறிஞர்கள் மா.இராசமாணிக்கனார், ஒளவை. துரைசாமியார், அ.கி.பரந்தாமனார் உள்ளிட்ட அறிஞர்கள் பணிபுரிந்தனர்.
மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் தமிழ் ஓசை என்ற நாளிதழைச் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட ஊர்களிலிருந்து வெளிவரும்படி நடத்தினார். இன்று சென்னையிலிருந்து மட்டும் பெரும் பொருள் இழப்புகளுக்கு இடையே வெளிவருகின்றது.
இதழியல் துறை இன்று வணிகமயமாகி விட்டதால் தமிழ் உணர்வு சார்ந்த செய்திகளை வெளியிடும் ஏடுகள் வெளிவருவதில் சிக்கல் உள்ளது. தமிழார்வலர்களால் வணிக இதழ்களுக்கு நடுவே போட்டியில் வெற்றி பெற முடியவில்லை.
நானும் செய்தி என்ற பெயரில் (1972-76) மதுரையிலிருந்து நாளிதழ் வெளியிட்டேன். பின்னர் நிறுத்தினேன். இதழ்கள் இன்று வணிக மயமானதால் மொழி, இனம் பற்றி எழுதுவதில்லை. பரபரப்பு செய்திகளை வெளியிட்டு ஆதாயம் அடைகின்றனர்.
பிரான்சு நாட்டில் பிரஞ்சு அகாதெமி மொழி வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிகின்றது. அங்கெல்லாம் 96 பக்கத்தில் இதழ்கள் வெளிவருகின்றன. ஒரு இதழில் மூன்று ஆங்கிலச் சொல்லைக் கலந்து எழுதியமைக்கு அந்த இதழ் ஆசிரியர் பிரஞ்சு அகாதெமிக்கு அழைக்கப்பட்டுக் கண்டிக்கப்பட்டார். ஆனால் தமிழகத்தில் ஆங்கிலமும்,சமற்கிருதமும் கலந்து எழுதப்படுகின்றன.
சிற்றிதழ்கள்தான் இன்று தமிழ்மொழி,தமிழ்த் தேசியத்திற்குப் பாடுபடுகின்றன. தமிழகத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிற்றிதழ்கள் வெளிவருகின்றன. இவை பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையேதான் வெளிவருகின்றன. திராவிட இயக்க ஏடுகள் முந்நூறுக்கும் மேல் வெளிவந்தன.
தமிழுக்கு ஐயாயிரம் ஆண்டு கால வரலாறு உண்டு. வரலாற்றை நோக்கும்பொழுது தமிழுக்கும் தமிழனுக்கும் காலந்தோறும் இடையூறுகள் ஏற்பட்ட வண்ணம் இருந்துள்ளது. தொல்காப்பியர் காலத்தில் சமற்கிருத ஆதிக்கத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. புலவர்களும் மன்னர்களும் இணைந்து இப்போரில் வெற்றி கண்டனர்.
வடமொழி ஆதிக்கத்தால் தமிழ் சிதைந்து தெலுங்கு,கன்னடம்,மலையாளம் என்று பிரிந்தது. பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் தந்த தமிழர்கள் கேரளர்களாக மாற்றம் அடைந்து எதிரிகளாகி விட்டனர்.
மொழியடிப்படையில் அழிவுகளைத் தொடங்கியதால் அரசன் பெயர், ஊர்ப்பெயர், கோயில்களின் பெயர், இறைவன் பெயர், ஆறுபெயர், குளம் பெயர் யாவும் வடமொழியாயின. மணிப்பிரவாள நடை உருவானது. அவற்றைப் புலவர்கள் தடுத்து நிறுத்தினர். இருபதாம் நாற்றாண்டில் மறைமலையடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார், தங்கப்பா, இரா.திருமுருகனார் உள்ளிட்ட அறிஞர்கள் தனித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டதால் நான் கிருஷ்ணன் என்ற பெயரில் இருந்தவன் நெடுமாறன் ஆனேன்.
எனவே தான் தொடர்ந்து தமிழ்ப் பகைவர்கள் மொழியையும் இனத்தையும் பல சூழ்ச்சி செய்து அழித்து வருகின்றனர். இரண்டாம் உலகப்போரில் மாண்டதை விட ஈழத்தமிழர்கள் இன்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நம் காலத்திலேயே தமிழ் அரியணை ஏற வேண்டும் என்றார் நெடுமாறன்.
நிகழ்ச்சியில், பொருளாளராகப் பொறுப்பேற்றுக்கொண்ட செல்வி தி.ப.சா.நர்மதா நன்றி கூறினார்
|
 |
|
அக்டோபர் 3ம் தேதி துவங்கவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பங்கேற்கும் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகள் நேற்று (30ந் தேதி) தேர்வு செய்யப்பட்டன. இதில் இந்திய ஹாக்கி அணி கேப்டனாக ராஜ்பால் சிங் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். சுரீந்தர் கவுர் பெண்கள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். பல்பீர் சிங், கோவிந்தா, சீதா மேத்தா ஆகியோர் அடங்கிய ‘ஹாக்கி இந்தியா’ தேர்வுக் குழு அணிகளை தேர்வு செய்தது. ஆண்கள் மற்றும் பெண்கள் அணியின் விபரம்:
ஆண்கள் அணி:
ராஜ்பால் சிங் (கேப்டன்), பரத் சேத்ரி (கோல் கீப்பர்), சந்தீப் சிங், சிவேந்திர சிங், சர்தார் சிங், தனஞ்சய் மகாதிக், குர்பாஜ் சிங், பிரபோத் டிர்கே, அர்ஜூன் ஹாலப்பா, விக்ரம் பிள்ளை, ரவிபால், பரத் சிகாரா, தனிஷ் முஜ்டபா, சர்வன்ஜித் சிங், துஷார் கண்டேகர் மற்றும் தரம்வீர் சிங்.
பெண்கள் அணி:
சுரீந்தர் கவுர் (கேப்டன்), தீபிகா மூர்த்தி (கோல் கீப்பர்), எடிமர்பு ரஜானி (கோல் கீப்பர்), பினிடா டோப்போ, சுப்த்ரா பிரதான், ஜாய்தீப் கவுர், அசுன்டா லக்ரா, கிரண்தீப் கவுர், முக்டா பிரவா பர்லா, தீபிகா தாகூர், ரிது ராணி, சபா அஞ்சும், ராணி, ஜஸ்ஜீத் கவுர், சஞ்சன் தேவி மற்றும் பூனம் ராணி ஆகியோர். |
 |
|
நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 19ம் தேதி நடக்கும் திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் கருணாநிதி பங்கேற்கிறார். செப் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள், செப் 17ம் தேதி பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் திமுக தோன்றிய நாள் விழா ஆகிய முப்பெரும் விழா குமரி மாவட்டத்தில் நடத்த வேண்டும் என்று குமரி மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான சுரேஷ்ராஜன் முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தார். அமைச்சரின் கோரிக்கையை ஏற்று குமரி மாவட்டத்தில் செப் 19ம் தேதி முப்பெரும் விழா நடத்த முதல்வர் கருணாநிதி அனுமதி வழங்கியுள்ளார். அதற்காக முதல்வர் கருணாநிதியை அமைச்சர் சுரேஷ்ராஜன் அவரது கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து செப் 19ம் தேதி நடைபெறுகின்ற முப்பெரும் விழாவில் திமுக தலைவர் முதல்வர் கருணாநிதி, திமுக பொருளாளர், துணை முதல்வர் முக ஸ்டாலின், பொது செயலாளர், நிதியமைச்சர் அன்பழகன் உள்பட திமுக முக்கிய புள்ளிகள் கலந்து கொள்கின்றனர். முப்பெரும் விழாவை மாநாடு போல நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் அமைச்சர் சுரேஷ் ராஜன் முடுக்கி விட்டுள்ளார்.
|
 |
|
இலங்கையில் மறு குடியமர்வு செய்யப்படும் தமிழர்கள் நிலைகுறித்து ஆய்வு செய்வதற்காக வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ் இலங்கை சென்றுள்ளார். இன்று (செவ்வாய்) அவர் இலங்கை வடக்கு பகுதிக்கு சென்று தமிழர்களின் நிலை குறித்து நேரில் பார்வையிடுகிறார். இலங்கை வடகிழக்கு பகுதியில் நடந்து வரும் மீள் குடியேற்ற புனரமைப்புத் தவிர இந்தியா அரசால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் நிருபமாராவ் பார்வையிடுகிறார். அதன் பிறகு இலங்கை தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இதற்கிடையே தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த தலைவர்களும், எம்.பி.க்களும் நிருபமாராவை சந்தித்து பேசுவார்கள் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் தமிழர் பிரதிநிதிகளை அவர் எப்போது எங்கு சந்திப்பார் என்ற விபரம் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நிருபமாராவை தமிழ்த் தேசிய கூட்டமைப்புத்தலைவர்கள் யாரும் சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லை தெரிய வந்துள்ளது. நிருபமாராவின் கொழும்பு நிகழ்ச்சி நிரல் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை நிருபமா சந்திப்பதற்கான விபரம் எதுவும் இடம்பெறவில்லை. இந்த தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழர்கள் மீள் குடியேற்றம் பற்றி ஆய்வு செய்யும் நிருபமாராவ் தமிழர்களின் அதிகாரப்பூர்வ பிரதி நிதிகளை சந்திக்காவிட்டால் முழுமையான உண்மை நிலவரம் இந்தியா அரசுக்கு தெரியாமலே போய்விடும் என்று ஈழத்தமிழர்கள் கவலை தெரிவித்துள்ளனர். |
 |
|
எப்போதும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் கருணாநிதிக்கும் திமுக ஆட்சிக்கும் முஸ்லீம்கள் பக்க பலமாக இருந்து துணை புரிய வேண்டும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ் மாநில தேசிய லீக் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் அசோகா ஹோட்டலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. அதில் பேசிய ஸ்டாலின், இங்கு உரையாற்றிய திருப்பூர் அல்தாப் ஒன்றை நினைவுக் கூறினார். தலைவர் கருணாநிதி ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் தவறுவதில்லை என்றார். எப்போதும், சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்குபவர் கருணாநிதி. நானும் 31 ஆண்டுகளாக தொடர்ந்து இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறேன். என்னுடைய கனிவான கோரிக்கை என்னவென்றால், ஒவ்வொரு முறையும் அழைப்பிதழில் என்னுடைய பெயரை சிறப்பு விருந்தினர் என்று குறிப்பிடுகிறீர்கள். நான் சிறப்பு விருந்தினர் அல்ல. நான் உங்களின் ஒருவனாக இருந்து இந்த வாய்ப்பை பெற்றுவருகிறேன். எனவே, அடுத்த ஆண்டாவது உங்களின் ஒருவனாக என்னைக் கருதி பங்குபெறும் வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும். 1969ம் ஆண்டு கழக ஆட்சியில் தான் மீலாது நபிக்கு முதன் முதலாக அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை கடந்த அதிமுக அரசு 2001ல் ரத்து செய்தது. 15.11.2006 முதல் மீலாது நபி நாளை அரசு விடுமுறை நாளாக மீண்டும் அறிவித்தது தலைவர் கருணாநிதி ஆட்சியில் தான். 1973ம் ஆண்டு உருது பேசும் லப்பைகள், தெக்கனி முஸ்லிம்கள் ஆகியோரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததும் கருணாநிதி தான். 1974ம் ஆண்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசினர் மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயரை சூட்டியதும் அவர் தான். 1989ம் ஆண்டு இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் சமுதாய மக்கள் பெரும்பயன் எய்தும் வகையில் " சிறுபான்மையினர் நல ஆணையம்'' உருவாக்கப்பட்டது. 1998ல் ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கை 2,000 என்பது 2,200 ஆக உயர்த்தப்பட்டு, 2008ல் 2,400 ஆகவும் உயர்த்தப்பட்டது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். 1999ம் ஆண்டு வரை ஹஜ் புனிதப் பயணத்திற்கு குலுக்கல் முறையில் ஆண்டிற்கு 1,800 பேருக்கு மிகாமல் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட முறையை கைவிட்டு, 1999ம் ஆண்டு முதல் தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கியதும் கருணாநிதி தான். 1999ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை, இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் பயன்பெறும் வகையில் தனியே பிரித்து `தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை' உருவாக்கியவர் கருணாநிதி. ஆனால், ஜெயலலிதாவின் அதிமுக அரசு 2003ல் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்துடன் இணைத்துவிட்டது. 2006ல் ஆட்சி பொறுப்பிற்கு வந்த கருணாநிதி மீண்டும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை தனியே செயல்படச் செய்து, அதன் மூலம், சிறுபான்மைச் சமுதாய மக்களுக்குத் கழக அரசு தொடர்ந்து உதவி வருகின்றது. 2000ம் ஆண்டு இஸ்லாமியரின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்பட்டு 21.7.2000 அன்று உருது அகாடமி தொடங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோருக்கான 30 விழுக்காடு இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு, 3.5 சதவீத உள் ஒதுக்கீட்டினை 15.9.2007ல் அண்ணா 99வது ஆண்டு பிறந்த நாள் பரிசாக வழங்கியதும் தலைவர் கலைஞர். 2008ல் சீறாப்புராணம் பாடிய உமறுப் புலவருக்கு எட்டயபுரத்தில் அமுதகவி உமறுப்புலவர் மணிமண்டபம் ஏற்படுத்தியதும் தலைவர் தான். உலமாக்கள் நல வாரியம் 24.8.2009 அன்று ஏற்படுத்தப்பட்டது. தமிழக மேலவையிலும், ராஜ்யசபாவிலும் முஸ்லிம் பிரதிநிதிகளை இடம்பெறச் செய்ததும் திமுக தான். 2006ம் ஆண்டு 5ம் முறையாக முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி எப்போதும் இல்லாத அளவிற்கு இரண்டு இஸ்லாமியர்களை தமிழக அமைச்சர்களாக அமர்த்தி அழகு பார்த்தார். தொடர்ந்து முஸ்லிம் பெருமக்களுக்கு பாடுபட்டு, சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் கருணாநிதிக்கும் திமுக ஆட்சிக்கும் பக்க பலமாக இருந்து துணை புரிய நீங்கள் எல்லாம் உறுதி ஏற்க வேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன் என்றார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் , அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, டி.பி.எம்.மைதீன்கான், சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், தமிழ்நாடு ஜமாதுல் உல மகா சபை தலைவர் அப்துல் ரகுமான் ஹஜ்ரத், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் கவிக்கோ அப்துல் ரகுமான், தமிழ்நாடு ஹஜ் கமிட்டித் தலைவர் பிரசிடென்ட் அபுபக்கர், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பேராயர் வின்சென்ட் சின்னத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர். |
 |
|
இலங்கையில் ஒருநபர் 2 தடவை தான் அதிபர் பதவி வகிக்க முடியும். அந்த அடிப்படையில் தான் அந்நாட்டு அரசியல் சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இலங்கை குடியுரிமை பெற்ற நபர் எத்தனை தடவையும் அதிபர் பதவி வகிக்கலாம். அதற்காக விதிக்கப்பட்டிருந்த காலவரம்பு நீக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்சே பதவி வகிக்கிறார். அவர் தற்போது 2-வது முறையாக இப்பதவியில் உள்ளார். இந்த பதவிகாலம் வருகிற நவம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளது. அதைத் தொடர்ந்து அவர் 6 ஆண்டுகள் அதிபர் பதவி வகிக்க முடியும். அதன் பிறகு நடைபெறும் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே, அவருக்கு ஆதரவாக அரசியல் சட்டம் திருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் சுமார் 25 ஆண்டு காலம் நடந்த போரை ராஜபக்சே முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். விடுதலைப்புலிகளை தோற்கடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்று திகழ்கிறார். சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் 144 இடங்களில் வெற்றி பெற்று மூன்றில் இரண்டு மடங்கு அளவு மெஜாரிட்டியை பெற்றுள்ளார். எனவே, இதே செல்வாக்கை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு 3-வது முறையும் தேர்தலில் போட்டியிட்டு அதிபர் பதவியில் நீடிக்க திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதற்கு வசதியாக அரசியல் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இதற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. இதே நடை முறை பாராளுமன்ற தேர்தலிலும் பின்பற்றப்பட உள்ளது. இந்த தகவலை செய்தி துறை மந்திரி கேகலியாராம் பக்வெல்லா தெரிவித்துள்ளார். மக்கள் செல்வாக்கு பெற்றுள்ள ஒரு குடிமகன் அதிபராகும் பட்சத்தில் அவர் தொடர்ந்து அப்பதவி வகிக்க இச்சட்டம் வழிவகை செய்துள்ளது என சுகாதார துறை மந்திரி மைத்திரிபாலா ஸ்ரீசேனா கூறியுள்ளார். மேலும், மக்கள் தீர்ப்புக்கு இது மரியாதை அளிக்க வேண்டியது அரசின் கடமை என்றும் அவர் கருத்து தெரி வித்துள்ளார். ஆனால், இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இதற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அதிபர் தனது அதிகா ரங்களை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
அரசியல் சட்டதிருத்தத்தின் மூலம் தனது குடும்ப ஆட்சியை இலங்கையில் தொடங்க முயற்சிக்கிறார் என்று கூறியுள்ளது. தற்போது மகிந்த ராஜபக்சேவின் மந்திரி சபையில் அவரது 2 தம்பிகள் சீனியர் மந்திரி களாகவும், ஒருவர் ராணுவ செயலாளராகவும் உள்ளார். அவரது மூத்த மகன் எம்.பி.யாக பதவி வகிக்கிறார். |
 |
|
டெல்லியில் 26.08.2010 அன்று நடைபெற்ற காவல்துறை மாநாட்டில் பேசிய ப.சிதம்பரம், நாட்டில் இப்போது காவி தீவிரவாதம் உருவாகி பல இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து இருக்கிறது என்று குறிப்பிட்டார். இதுகுறித்து பாஜக தலைவர் நிதின் கட்காரி கூறுகையில், காவி பயங்கரவாதம் என்ற நடைமுறை தலை தூக்கி வருவதாக, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசியுள்ளார். சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியலுக்காகவே, அவர்களை திருப்திபடுத்தும் வகையில் இவ்வாறு அவர் பேசியுள்ளார். மதத்தை தாண்டி இருப்பது பயங்கரவாதம். அவர்களை மத அடிப்படையில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. பயங்கரவாதிகளை ஒடுக்கும் விஷயத்தில், மத்திய அரசு தீவிரமாகச் செயல்படவில்லை. அதேபோல், நக்சலைட் வன்முறைகளும் அதிகரித்து விட்டன. சொல்லப்போனால் பசுபதிநாத் முதல் கன்னியாகுமரி வரை பரவி நிற்கிறது என்றார்.
பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி, எந்த வகையில் ப.சிதம்பரம் அவ்வாறு பேசினார் என்று விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். காவி தீவிரவாதம் என்று ப.சிதம்பரம் பேசியதற்கு, பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும். தான் பேசியதை டாளுமன்றத்தில் ப.சிதம்பரம் வாபஸ் பெற வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் முக்கிய பங்காற்ற வேண்டும். காவி வண்ணம் என்பது பக்தி, அர்ப்பணிப்பு, தியாகம் ஆகியவற்றின் அடையாளம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்தகைய காவி வண்ணத்தை ப.சிதம்பரம் தீவிரவாதத்துடன் ஒப்பிடுவது கண்டிக்கத்தக்கது என்று ராஜ்நாத் சிங் கூறினார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது அலகாபாத் மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது. படான் மாவட்டத்தைச் சேர்ந்த சுவாமி நிஜானந்த் தீர்த் என்பவர் இ.பி.கோ. 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். காவி தீவிரவாதம்' என்று பேசி இந்துக்களின் மனதை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் புண்படுத்தி விட்டார். ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த வழக்கில் அவர் குறிப்பிட்டு உள்ளார். |
 |
|
தமிழ்நாட்டில் மதுபான விற்பனையை அரசே ஏற்று நடத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இதற்காக சுமார் 6700 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.12 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிது. டாஸ்மாக் கடைகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். டாஸ்மாக் மதுபான கடைகள் மூலம் வரும் வருமானம் தமிழக அரசுக்கு மிக முக்கிய வருமானமாக உள்ளது. இந்த வருமானத்தை மேலும் அதிகரிக்க செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகளில் ரம், விஸ்கி, பிராண்டி போன்ற மது வகைகள் விற்கப்படுகின்றன. பல பிராண்டுகளில் இந்த மது வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வருமானத்தை அதிகரிக்க செய்வதற்காக மேலும் 39 மதுபான வகை தயாரிப்புக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 39 வகை மதுபானங்களை தயாரித்து கொடுக்கும் உரிமை மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லிரிஸ், சதர்ன் அக்ரி பியூரன் இன்டஸ்டிரிஸ், எம்.பி.டி. ஸ்டில் சிரிஸ், எஸ்.என்.ஜே. டிஸ்டில் சிரிஸ், மோகன் பிரவேரிஸ் ஆகிய நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. |
 |
|
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு உள்ளிட்ட ஐந்து பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் ரூ.14 ஆயிரம் கோடி நிதியை முறைகேடு செய்யப்பட்ட வழக்கில் நிறுவனத் தலைவர் பி. ராமலிங்க ராஜு மற்றும் அவரது சகோதரர் ராம ராஜு, நிதி அதிகாரி வி. ஸ்ரீனிவாஸ் மற்றும் இருவருக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கியது. இவர்களுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தீபக் வர்மா, தல்பீர் பண்டாரி ஆகியோரடங்கிய டிவிஷன் பெஞ்ச் இதை விசாரித்தது. இவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ஏன் ரத்து செய்யக் கூடாது என்பதற்கு ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
 |
|
சென்னை அண்ணாசலையில் 10 ஆயிரம் சதுரப்பரப்பளவில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் முதல்வர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வளாகத்தை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர். சென்னை மேலும் மேலும் வளர வேண்டு;ம், வளம்பெற வேண்டும். இந்தியாவில் இருக்கின்ற பெரு நகரங்களுக்கு இணையாக சென்னை மாநகரம் விளங்க பாடுபடுவேன் என்று தெரிவித்த அவர், நகரின் வளர்ச்சிக்கு குறுக்கே பல சக்திகள் செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார். இதில் வளாகத்தின் தலைவர் சரோஜ் கோயங்கா, தமிழக ஆளுனர் சுர்ஜித்சிங் பர்னாலா மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
|
 |
|
நாடாளுமன்றத்தில் நேற்று தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான அத்துமீறல்கள் குறித்து விவாதம் நடந்தது. இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான அத்துமீறல்களை களைய சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு ஏற்ப புதிய விதிமுறைகள் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் தேவைப்படும் பட்சத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவர அனைத்து மாநில அரசுகளும் முனைப்போடு செயல்பட வேண்டும் என்றும் அதற்கு தேவையான அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
|
 |
|
ஆந்திராவில் முன்னாள் முதல்வர் இராஜசேகரரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவரது மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத கட்சித் தொண்டர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் இராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி, தந்தை மரணத்தின்போது தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யாத்திரை பயணத்தை அவர் மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவை மறுத்து ஜெகன்மோகன் ரெட்டி நடத்தும் யாத்திரை பயணத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பெருமளவு ஆதரவை அளித்து வந்தனர். இந்நிலையில் தற்போது திடீர் திருப்பமாக படிப்படியாக தலைவர்களி;ன் ஆதரவு குறைந்து வருகிறது. இதனால் யாத்திரை பயணத்தில் குழப்பநிலை உருவாகியுள்ளது. இது குறித்து ஜெகன்மோகன் ரெட்டி கூறும்போது, திட்டமிட்டபடி யாத்திரை பயணம் தொடரும் என்றார்.
|
 |
|
தமிழ் மாநில தேசியலீக் கட்சி சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பில் சென்னை தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு கட்சியின் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப் தலைமை தாங்கினர். நோன்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது மு.க.ஸ்hலினுக்கு ஒன்னரை கிலோ எடை கொண்ட வெள்ளி மாலை அணிவிக்கப்பட்டது. அவர்பேசும்போது, சிறுபான்மையினருக்கு தலைவராக என்றும் விளங்குவேன் என்று தெரிவித்தார். இதில் அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, மைதின்கான், தயாநிதிமாறன், மேயர் மா.சுப்ரமணியன், இந்திய யூனியன் முஸ்லீம்லீக் தலைவர் காதர்மொய்தீன், சிறுபான்மை ஆணையர் வின்சன்ட் சின்னதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
|
|