பெருந்துறை சிப்காட் வளாகத்தில் நச்சுக்கழிவு கிடங்கு அமைக்க திட்டமிட்டிருக்கும் தமிழக அரசை கண்டித்து ஈரோடு புறநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் அடுத்தமாதம் இரண்டாம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
2010-07-28 03:59:03
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் அபாயகரமான கழிவுப் பொருட்களை சுத்திகரித்து பாதுகாப்பாக வெளியேற்ற நச்சுக்கழிவு கிடங்கு அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால், அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த சூழலில் சேமிப்புகிடங்கு பெருந்துறை சிப்காட் வளாகத்தில் நிறுவப்பட்டால் பெருந்துறை, சென்னிமலை ஆகிய ஒன்றியங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் ஏற்கனவே கூத்தம்பாளையம், செங்குளம், ஈங்கூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் கிணற்றுநீர் உவர்நீராக மாறிவிட்டதாகவும் சில பகுதிகளில் காற்றடிக்கும்போது வயிற்றை குமட்டும் அளவிற்கு துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் கூறுவதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார். எனவே ஏழை – எளிய விவசாயிகள். சமூகஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பை புறந்தள்ளிவிட்டு இந்த திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபடவிருக்கும் தமிழக அரசை கண்டித்து வரும் இரண்டாம் தேதி, பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.