Thursday , 20 September 2018
Home » தமிழ்நாடு » 3 ஆயிரம் பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டம்!

3 ஆயிரம் பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டம்!

2மத்திய அரசின் நிதி உதவி கிடைக்காது என்பதால் 3 ஆயிரம் பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறை மூலம் 31 ஆயிரத்து 200 பள்ளிக்கூடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. பல இடங்களில் 15-க்கும் குறைவான மாணவர்களை கொண்டு பள்ளிகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநில அரசுகள் நடத்தக்கூடிய பள்ளிகளுக்கு மத்திய அரசு பல்வேறு நிதி உதவிகளை செய்கிறது. சர்வ-சிக்ஷா-அபியான், ராஷ்டீரிய-மத்திய-மிக்-அபியான் ஆகிய திட்டங்களின் கீழ், ஏற்கெனவே பள்ளிகளுக்கு உதவிகளை செய்து வந்தது. தற்போது இந்த இரு திட்டங்களையும் இணைத்து சமக்ரா-சிக்ஷா-அபியான் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின்படி மத்திய அரசு ரூபாய் 25 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 1 லட்சம் வரை, மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி உதவிகளை செய்கிறது. ஆனால் 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளுக்கு இந்த உதவிகள் வழங்கப்படாது என்று விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 15 மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளிகளை மூடுவது அல்லது மற்ற பள்ளிகளுடன் இணைப்பது என்று, மாவட்ட அதிகாரிகளுக்கு தமிழக அரசிடம் இருந்து தகவல் சென்றுள்ளது. அந்த பள்ளிகளுக்கு நிதி உதவிகள் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்படி மிகவும் குறைவான மாணவர்களை கொண்ட 3 ஆயிரம் பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com