Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள் 35 பேர் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » Uncategorized » வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள் 35 பேர் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள் 35 பேர் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள் 35 பேர் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள் 35 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள் 35 பேர் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
சென்னை:

தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இதில் ஒரு சங்கத்தை தவிர்த்து ஏனைய டாக்டர்கள் சங்கங்கள் இணைந்து கடந்த 25-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலமுறை ஊதியமும், பிற மாநிலங்களுக்கு இணையான ஊதிய உயர்வும் வழங்க வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடந்து வருகிறது.

அவசர சிகிச்சை பிரிவு மற்றும் டெங்கு காய்ச்சல் பிரிவில் மட்டும் பணியினை மேற்கொண்டு வரும் அரசு டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்ட ஆபரே‌ஷன்கள், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுகளை புறக்கணித் தனர்.

இதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். புறநோயாளிகள் மட்டுமின்றி உள்நோயாளிகளும் அவதிப்படுகிறார்கள்.

குறித்த காலத்தில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைகள் ஒரு வாரமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அவசரமாக செய்ய வேண்டிய ஆபரே‌ஷன்கள் மட்டுமே நடந்து வருகின்றன. டாக்டர்கள் போராட்டத்துக்கு பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை பட்ட மருத்துவ மாணவர்கள் ஆதரவு அளித்ததால் போராட்டம் தீவிரம் அடைந்தது.

சென்னையில் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் அரசு டாக்டர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டது. குறைந்த அளவு மருத்துவர்களை கொண்டு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும் போராட்டத்தை கைவிடாமல் அரசு டாக்டர்கள் முன் எடுத்து செல்கின்றனர். பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தையின் போது கோரிக்கைளை நிறைவேற்றுவதாக உறுதியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் இப்போது முரண்பாடுடன் பேசி வருவதாக டாக்டர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த பிரச்சனையில் முதல்- அமைச்சர் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர்

இதற்கிடையில் அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.

போராட்டத்தை கைவிடாத மருத்துவர்கள் மீது பணி முறிவு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மேலும் அவர்களது பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டு புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்.

இன்று காலைக்குள் பணிக்கு வராவிட்டால் பணி முறிவு செய்யப்படும் என்றும் பிற்பகல் 2 மணிக்குள் வராத டாக்டர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு காலி இடங்களாக கருதப்பட்டு மருத்துவ தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டு காத்திருக்கும் டாக்டர்கள் பணியில் நியமிக்கப்படுவார்கள் என்று விஜயபாஸ்கர் அறிவித்தார்.

இதையடுத்து அனைத்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் சென்னையில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசு ஆஸ்பத்திரிகளில் இன்று பணிக்கு வராதவர்கள் பட்டியலை கணக்கிட்டு உடனடியாக மருத்துவ கல்வி இயக்குனர் மற்றும் பொதுசுகாதாரத்துறை இயக்குனர், மருத்துவ பணிகள் இயக்குனருக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி இன்று காலை 8 மணி வரை வேலைக்கு வராத அரசு டாக்டர்கள் மீது அதிரடி நடவடிக்கை பாய்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட சங்கங்களின் நிர்வாகிகள் மீது முதல்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. வேலை நிறுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்ட அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள் மற்றும் தலைமை மருத்துவமனை இயக்குனர்கள், பொதுசுகாதாரத்துறை இணை, துணை இயக்குனர்கள் ஆகியோர் இன்று காலை முதல் பணிக்கு வராத டாக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தொடங்கினர்.

டாக்டர்கள் தாங்கள் பணிபுரிந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். சிலர் மீது 17-பி பிரிவின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சிலருக்கு உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீது துறை ரீதியான நட வடிக்கை தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றிய 6 டாக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 4 டாக்டர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். ஜனநாயக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் பி.பாலகிருஷ்ணன் உள்பட முக்கிய நிர்வாகிகள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று கூறியதாவது:-

பெரும்பாலான அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை. தமிழகம் முழுவதும் 10 சதவீதம் பேர் மட்டுமே போராட்டத்தில் கலந்து கொண்டனர். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே டாக்டர்கள் வேலைநிறுத்தம் நடந்தது. மற்ற பெரும்பாலான மாவட்டங்களில் போராட்டம் நடைபெறவில்லை. இன்று 7-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது பணி முறிவு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

புதிய மருத்துவர்கள் எடுப்பதற்காக நோட்டீஸ் மருத்துவ தேர்வு வாரியத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. பணிக்கு வராத காலி இடங்கள் கண்டறியப்பட்டு இன்று மாலைக்குள் புதிய டாக்டர்களை நியமிக்கும் ஆயத்த பணிகள் தொடங்கும்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 35 மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தை கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தைக்கு டாக்டர்கள் வரவேண்டும் என்பது தான் அரசின் முடிவு. ஏழை- எளிய மக்களுக்கான சிகிச்சை பாதிக்கக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

200 முதல் 300 டாக்டர்கள் வரை புதிதாக நியமிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் சங்கத்தின் மாநில துணை ஒருங்கிணைப்பாளரும், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருபவருமான டாக்டர் ரங்கசாமி தர்மபுரி மாவட்டத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com