சென்னை ராயப்பேட்டையில், எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாக கழிவுநீர் தொட்டியில், நேற்று அதிகாலை விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், அதன் உரிமையாளர், ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக நடைபெற்ற போலீஸ் விசாரணையில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என்ற சட்டவிதிகளை மீறி எக்ஸ்பிரஸ் அவென்யூ நிர்வாகிகள் செயல்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
மேலும், இளைஞர் ஒருவர் மயமக்கமடைந்து சிக்கியபோது, அதுபற்றி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்தததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாக உரிமையாளர், அதன் பராமரிப்பு பிரிவு நிர்வாகிகள், ஒப்பந்ததாரர் தண்டபானி ஆகியோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
மனிதர்களை கொண்டு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய கூடாது என்பதை முன்னிறுத்தி, 2013ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டப்பிரிவு 9 மற்றும் எஸ்.சி, எஸ்.டி ஆக்ட் எனப்படும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உட்பட 3 சட்டப் பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவாகியுள்ளது. ஒப்பந்ததாரர் தண்டபானியை கைது செய்திருக்கும் போலீசார், சம்பந்தபட்டவர்களை கைது செய்து குறித்து ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.