Monday , 23 October 2017
Home » இந்தியா » ரோஹிங்கயா மக்கள் அனைவரும் நாடு கடத்தப்படுவர் : ராஜ்நாத் சிங் தகவல்…

ரோஹிங்கயா மக்கள் அனைவரும் நாடு கடத்தப்படுவர் : ராஜ்நாத் சிங் தகவல்…

rajnath-singh_13_0_0_0_0_0_1_0_1_0_1மியான்மரில் ரோஹிங்கயா மக்கள் சிறுபான்மை இனத்தவராக வாழ்ந்து வருகின்றனர். இந்த இன மக்களுக்கு அவர்களது சொந்த நாட்டிலேயே பல்வேறு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் தங்கள் நாட்டில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மியான்மரில் உள்ள ரோஹிங்கயா மக்களை நாடு கடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆனால் ரோஹிங்யா முஸ்லிம்கள் அனைவரும் சட்ட விரோத குடியேறிகள் எனவும் அவர்களை திருப்பி அனுப்ப அரசு கொள்கை முடிவு எடுத்து இருப்பதாகவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளது. இந்நிலையில் டெல்லியில் மனித உரிமை ஆணையம் சார்பில் நடந்த கருத்தரங்கில் பேசிய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ரோஹிங்கயா மக்கள் அகதிகள் அல்ல சட்ட விரோதமாக குடியேறியவர்கள், ஏனெனில் அகதிகள் என்ற நிலையை பெறுவதற்கு அவர்கள் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்து இருக்க வேண்டும்.

ஆனால் எந்த ஒரு ரோஹிங்யாவும் இந்தியாவிடம் இருந்து அடைக்கலம் பெறவும் இல்லை, அதற்காக விண்ணப்பிக்கவும் இல்லை என்று கூறியுள்ளார். அவர்கள் அனைவரும் விரைவில் நாடு கடத்தப்படுவர் என்று உறுதிபட கூறியுள்ள அவர், சட்ட விரோதமாக குடியேறியவர்களை அகதி வரம்புக்குள் கொண்டு வர முடியாது என்று தெரிவித்துள்ளார். ரோஹிங்கயா மக்கள் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்நிலையில் ராஜ்நாத் சிங் கூறியுள்ள கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com