மண்சரிவால் இரு நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்று மீண்டும் துவங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலைப்பாதை வழியாக நூற்றாண்டைக் கடந்து மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தொடர்மழையால் ஆடர்லி – ஹில்கிரோ ரயில் நிலையங்கள் இடையே மண் சரிவால் பாறை விழுந்து தண்டவாளம் சேதமடைந்ததால், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்ட ரயிலில், முன்பதிவு செய்திருந்த 150-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குதூகலத்துடன் பயணித்துச் சென்றனர்.