Monday , 18 February 2019
Home » இந்தியா » முத்தலாக் தடை சட்ட மசோதா நிறைவேற்றம்!

முத்தலாக் தடை சட்ட மசோதா நிறைவேற்றம்!

1மக்களவையில் காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்புக்கு மத்தியில் முத்தலாக் தடை மசோதா நிறைவேறியது.இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆண், 3 முறை தலாக் எனக் கூறி தன் மனைவியை விவாகரத்து செய்வது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், முத்தலாக் நடைமுறை சட்டவிரோதமானது என்று கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மேலும் இது தொடர்பாக நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து முத்தலாக் முறை சட்ட விரோதம் என அறிவிக்கும் மசோதா மக்களவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் முத்தலாக் நடைமுறையை தடை செய்து மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. முத்தலாக் தடையை மீறி ஒருவர் செயல்பட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவசர சட்டத்தின் ஆயுள் 6 மாதமே என்பதால், அதற்குள் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும். எனவே இது தொடர்பான சட்டமசோதாவை மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், உலகில் 20 இஸ்லாமிய நாடுகள் முத்தலாக்கை தடை செய்து விட்டதாக குறிப்பிட்டார். மதசார்பற்ற நாடான இந்தியா ஏன் தடை செய்யவில்லை என்று கேட்ட அவர், அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு, இந்த மசோதாவைப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால் மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. எதிர்க்கட்சிகள் கோரிய திருத்தங்களையும் மத்திய அரசு நிராகரித்தது. இதையடுத்து முத்தலாக் மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் அதிமுக எம்பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 5 மணி நேர கடும் விவாதத்திற்குப் பின் முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது

Facebook Auto Publish Powered By : XYZScripts.com