Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ; இந்திய அணி அபார வெற்றி … | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » முக்கிய செய்திகள்: » முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ; இந்திய அணி அபார வெற்றி …

முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ; இந்திய அணி அபார வெற்றி …

Britain Cricket - India v Pakistan - 2017 ICC Champions Trophy Group B - Edgbaston - June 4, 2017 India’s Virat Kohli celebrates the wicket of Pakistan’s Azhar Ali  Action Images via Reuters / Andrew Boyers Livepic

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தம்புலாவில் நேற்று நடந்தது. டாஸில் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இலங்கை அணியை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படவில்லை. சாஹல், அக்ஷர் படேல் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். இலங்கை அணியில் சமரா கபுகேதரா, திசரா பெரேரா ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.

டெஸ்ட் போட்டித் தொடரில் இந்திய அணியிடம் முற்றிலும் சரணடைந்த நிலையில் ஆடிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், அதற்கு நேர் மாறான ஆட்டத்தை நேற்று வெளிப்படுத்தினர். திக்வெலாவும், குணதிலகாவும் இந்திய அணியின் பந்துவீச்சை ஆரம்பம் முதலே எவ்வித பதற்றமும் இன்றி எதிர்கொண்டனர். இதனால் அந்த அணியின் ஸ்கோர் மளமளவென்று உயர்ந்தது. 8.5 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 50 ரன்களைத் தொட்டது.

ஒரு ஓவருக்கு சராசரியாக 5 ரன்களுக்கு மேல் எடுத்துக்கொண்டிருந்த இலங்கை அணியின் தொடக்க ஜோடியை சாஹல் பிரித்தார். இலங்கை அணியின் ஸ்கோர் 74 ரன்களாக இருந்தபோது சாஹல் வீசிய பந்தில் லோகேஷ் ராகுலிடம் கேட்ச் கொடுத்து குணதிலகா (35 ரன்கள்) ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து மெண்டிஸுடன் சேர்ந்து திக்வெலா, ரன் குவிப்பைத் தொடர்ந்தார். 65 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் அரை சதத்தைக் கடந்த திக்வெலா, இலங்கை அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்த முயன்றார். ஆனால் 64 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் கேதார் ஜாதவின் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி திக்வெலா ஆட்டம் இழந்தார். 2 விக்கெட்கள் பறிபோன நிலையிலும் 27 ஓவர்களில் இலங்கை அணி 150 ரன்களைத் தொட்டது.

ஆனால் அதன் பிறகு இலங்கை அணியின் விக்கெட்கள் சரியத் தொடங்கின. 37 பந்துகளில் 36 ரன்களை எடுத்திருந்த குசால் மெண்டிஸ், அக்ஷர் படேலின் பந்தில் போல்ட் ஆகி ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து உபுல் தரங்கா (13 ரன்கள்), கபுகேதரா (1 ரன்), ஹசரன்கா (2 ரன்கள்), பெரேரா ( 0) ஆகியோர் ஆட்டம் இழக்க, இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் என்று தள்ளாடத் தொடங்கியது.

கடைசி கட்டத்தில் ஏஞ்சலோ மேத்யூஸ் மட்டும் தனியாளாக போராடிய நிலையிலும் இலங்கை அணியின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இறுதியில் இலங்கை அணி, 216 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கடைசிவரை போராடிய மேத்யூஸ் 36 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணியில் அக்ஷர் படேல் 3 விக்கெட்களையும், பும்ரா, சாஹல், கேதார் ஜாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து ஆடவந்த இந்திய அணி, 23 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை இழந்தது. 13 பந்துகளில் 4 ரன்களை மட்டுமே சேர்த்த ரோஹித் சர்மா, ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்தபோதிலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவண், அதிரடியாக ஆடி ரன்களைக் குவிக்க, இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென்று உயர்ந்தது. ஷிகர் தவண் 36 பந்துகளில் 8 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். அவரது எக்ஸ்பிரஸ் வேக ஆட்டத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் கேப்டன் விராட் கோலியும் ரன் மழை பொழிய இந்திய அணி, 14.3 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தது.

இந்திய அணியின் ரன் வேகத்தால் இலங்கை பந்து வீச்சாளர்கள் சோர்வடைந்தனர். இது இந்திய அணி மேலும் ரன்களைக் குவிக்க உதவியது. அரை சதம் அடித்த பின்னர் சூறாவளியாய் சுழன்றடித்த ஷிகர் தவண், 71 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 16 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும். அவருக்கு சற்றும் குறையாமல் பேட்டிங்கில் வேகத்தைக் காட்டிய விராட் கோலி 51 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார். இந்த ஜோடியின் துடிப்பான ஆட்டத்தால் இலங்கை அணி அடித்த ஸ்கோரான 216 ரன்கள் மிகச்சிறிய இலக்காக காட்சியளித்தது.

மேற்கொண்டு விக்கெட்களை இழக்காமல் வீறு நடைபோட்ட இந்திய அணி, 28.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 220 ரன்களைக் குவித்தது. இதன் மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷிகர் தவண் 132 ரன்களுடனும், விராட் கோலி 82 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒருநாள் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com