மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் பருத்தி விளைச்சல் அமோகமாக உள்ள நிலையில், போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பெருமாள்கோவில்பட்டி, அல்லிகுண்டம், கணவாய்ப்பட்டி, சேடப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மழை காரணமாக பருத்தி விளைச்சல் அமோகமாக உள்ள நிலையில், 1 கிலோ பருத்தி 22 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
இதனால் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறும் விவசாயிகள் போதிய விலை கிடைக்கவும், நேரடி கொள்முதல் மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.