Tuesday , 30 November 2021
Home » தமிழ்நாடு » பிழை இல்லாத வாக்காளர் பட்டியல், திருத்தம் பணி தொடக்கம்!

பிழை இல்லாத வாக்காளர் பட்டியல், திருத்தம் பணி தொடக்கம்!

TNEC0610_01பிழையே இல்லாமல் வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்வது தொடர்பாக, தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது.
இந்த ஆலோசனையை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நடத்துகிறார். இதில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய மாநில கட்சிகளும், காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியையும் சேர்ந்த இரண்டு பேர் பங்கேற்கவுள்ளனர். வாக்காளர் பட்டியலை முழுவதுமாகத் திருத்தம் செய்வதற்கான திட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி, வாக்காளர் பட்டியலில் இரண்டு இடங்களில் பெயர் இருந்தால், அதை வாக்காளர்களே தெரிவித்து நீக்க வாய்ப்பு கொடுப்பதும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய உரிய விண்ணப்பங்களை அளிப்பதும், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றைப் பெறுவதும் தேர்தல் ஆணையம் புதிதாக வகுத்துள்ள திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி முதல் ஜூலை மாதம் வரை ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கிறது.இந்த மனுக்களின் மீது 15 நாள்களுக்குள் தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் திட்டம் தொடர்பாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா இன்று கூட்டியுள்ள கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் விவாதிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தனித்தனியாக கருத்துகள் கோரப்பட்டு அவை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com