பிசிசிஐ மீதுள்ள தவறான பிம்பத்தை மாற்றுவதற்கு தனக்கு சிறப்பான வாய்ப்பு கிடைத்திருப்பதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ மீதான ஊழல் புகார்கள் காரணமாக, அதை நிர்வகிக்க உச்சநீதிமன்றம் குழு அமைத்தது. அந்தக் குழு தான், கடந்த 33 மாதங்களாக பிசிசிஐயின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், அக்டோபர் 23ஆம் தேதி பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும் என நிர்வாகக் குழு அறிவித்தது. அதற்கான பணிகள் கடந்த மே மாதமே தொடங்கின.
ஒவ்வொரு மாநிலங்களின் கிரிக்கெட் சங்கங்களும் வேட்பாளர்களை முன்மொழிந்தன. அவர்களில், பெரும்பாலானோர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலியை, பிசிசிஐ தலைவராக்குவதற்கு ஆதரவு அளித்தனர்.
மும்பையில் நேற்று நடந்த கூட்டத்தில் பிசிசிஐயின் அடுத்த தலைவராக சவுரவ் கங்குலி ஒருமனதாக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதை அடுத்து, இன்று அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் பிசிசிஐயின் அடுத்த தலைவர் கங்குலி தான் என்பது உறுதியாகியுள்ள போதும் 23ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கங்குலி, கடந்த 3 ஆண்டுகளாக பிசிசிஐயின் நிலைமை சிறப்பாக இல்லை என்றும், அதை மாற்றி அமைக்க தனக்கு சிறப்பான வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
உள்ளூர் கிரிக்கெட்டுக்கு நிதி ஒதுக்கி அதை மேம்படுத்துவது தான் தமது முதல் பணி என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ தலைவர் பதவிக்கு ஒரு போதும் ஆசைப்பட்டதில்லை என்று குறிப்பிட்ட கங்குலி, இன்னும் சில மாதங்களில் அனைத்தையும் சரிசெய்து, பிசிசிஐயை இயல்பு நிலைக்கு கொண்டு வரப் போவதாக உறுதி அளித்துள்ளார்.