தமிழகம் முழுவதும் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து இருப்பதால் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல் நெல்லை மாவட்டத்திலும் கடந்த சில வாரங்களாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் குண்டாறு, கருப்பா நதி, அடவி நயினார் கோவில் நீர்த்தேக்கம் போன்ற அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதே போல் அருகில் உளள அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள தென்மலை நீர்த்தேக்கம் 115.82 அடி கொண்டது. இந்த அணையும் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது.
132 அடியுள்ள அடவி நயினார் கோவில் நீர்த்தேக்கம் நேற்று இரவு ழுழுக்கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்து வருகிறது. அணைக்கு வரும் சுமார் 120 கன அடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கார் சாகுபடிக்காக மேட்டு கால், கரிசல் கால் ஆகிய கால்வாய்கள் 45 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அடவி நயினார் கோவில் நீர்த்தேக்கத்திற்குட்பட்ட கடைகோடி பகுதியான சாம்பவர் வடகரை வரையுள்ள விவசாயிகள் கார் சாகுபடிக்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
கார் சாகுபடிக்கான பணிகள் வேகமாக நடைபெற்;று வரும் வேளையில் நெல் விதை மற்றும் உரம் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது. தனியாரிடம் அதிக விலை கொடுத்தே பணிகளை தொடர வேண்டிய நிலையில் இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். எனவே மானிய விலையில் உரம் மற்றும் நெல் விதை கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், வடகரை அருகே உள்ள சின்னக்காடு, பெருசா பள்ளியில் யானைகள் அட்டகாசம் அதிகரித்து இருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களையும், ஏராளமான தென்னை மரங்களையும் யானைகள் சேதப்படுத்தியுள்ளது. வனத்துறையினரும் யானைகளை விரட்ட எடுத்து வரும் முயற்சிகள் தோல்விகளில் முடிந்து வருகிறது. எனவே சின்னக்காடு முதல் அடவி நயினார் கோவில் நீர்த்தேக்கம் வரை சோலார் மின்வேலி அமைத்து தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.