பவானிசாகர் அணை நிரம்பி இருப்பதால், அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும்.
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இந்த அணையின் மூலம் பாசன வசதி பெறுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டி, கடல்போல காட்சியளிக்கிறது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2308 கனஅடியாக உள்ளது.
அணையிலிருந்து பவானி ஆற்றில் விநாடிக்கு 2300 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. கீழ்பவானி வாய்க்காலில் கரை உடைப்பு ஏற்பட்டதால் வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. கரை சீரமைப்பு பணிகள் முடிந்தபின் கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.