Tuesday , 22 January 2019
Home » தமிழ்நாடு » நாட்டை காக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக்க முன்மொழிவோம்

நாட்டை காக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக்க முன்மொழிவோம்

DMKபிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை முன்மொழிவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராகுல்காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சி தருக என்றும் அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
சென்னை தேனாம்பேட்டையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தின் முன்பு கலைஞருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையின் திறப்பு விழா நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் துரைமுருகன் மற்றும் கட்சியின் முன்னணித் தலைவர்கள் விழாவுக்கு வந்தவர்களை வரவேற்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்தார். சிலைத் திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தமிழகக் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சத்ருகன் சின்கா, நடிகர் ரஜினிகாந்த், வடிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சிலை திறப்பிற்குப் பின் அங்கிருந்து சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்ற சோனியா காந்தி உள்ளிட்டோர் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து ராயப்பேட்டையில் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திபாபு நாயுடு, ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்தார். மேலும் தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பிரச்னையை பாஜக எழுப்பி வருகிறது என்று தெரிவித்த அவர், தமிழக அரசை ரிமோட் கண்ட்ரோல் மூலம் மத்தியில் ஆளும் பாஜக அரசு இயக்கி வருகிறது என்று தெரிவித்தார். கலைஞர் சிலை திறப்புவிழா பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கஜா புயலால் தமிழகத்தில் பேரிடர் நேரிட்டபோதும் இரங்கல் தெரிவிக்க பிரதமர் மோடி மறுப்பதாக குற்றம்சாட்டினார். தமிழர் என்றால் அவ்வளவு அலட்சியமா என்று கேள்வி எழுப்பிய அவர், பாஜக அரசை வீழ்த்துவதற்காக 21 கட்சிகள் இணைந்திருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டார். மேலும், பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை முன்மொழிவதாக தெரிவித்த ஸ்டாலின், ராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சி தருக என்றும் அவர் வரவேற்றார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய சோனியாகாந்தி, 70 ஆண்டு கால இந்தியாவின் அரசியல் சாசன சட்டத்தை பாதுகாக்க உறுதி ஏற்போம் என்று தெரிவித்தார். முன்னதாக உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மக்களின் குரலை மதிக்காத அரசாகவும், மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை மதிக்காத அரசாகவும் மத்திய அரசு உள்ளதாக சாடினார். நாட்டின் ஒற்றுமையை அழிக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை ஏற்கப் போவதில்லை என்றும், நாட்டுக்காக ஒன்றுபட்டு பாடுபட இருப்பதாகவும் ராகுல் காந்தி கூறினார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com