
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2ம் நாளான இன்று 13 மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக சட்டப்பேரவை நேற்று காலை 10 மணிக்கு கூடியது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். தொடர்ந்து அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் தனபால் படித்தார். அவர் படித்து முடித்ததும் 11.56 மணியளவில் அன்றைய கூட்டம் நிறைவடைந்தது. கூட்டம் முடிந்த பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இந்த ஆய்வுக் குழு கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 9ம் தேதி வரை நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடியதும் 13 மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நல்லப்பன், வடிவேறு, ஜெனிபர் சந்திரன், உசேன், சுப்பிரமணியம், முரளிதரன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அழகுராஜா, நாராயணன், சின்னப்பன், சுப்பிரமணியன், பாலசுந்தரம், தேவராஜன், சக்திவேல் முருகனுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து 15 நிமிடம் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டு காலை 10.20 மணிக்கு மேல் தொடங்கும் என சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.