Sunday , 16 December 2018
Home » தமிழ்நாடு » தமிழகத்தின் இசைவின்றி மேகதாது அணை கட்டக்கூடாது!

தமிழகத்தின் இசைவின்றி மேகதாது அணை கட்டக்கூடாது!

1தமிழகத்தின் இசைவின்றி மேகதாது அணை கட்டக்கூடாது என தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக முதலமைச்சர் பழனிசாமி தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அதில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி மேகதாது அணை கட்டும் பணியை கர்நாடக அரசு துவங்கவுள்ளதற்கும், அதற்கு மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்ததற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மத்திய நீர்வளக் குழமம் வழங்கிய அனுமதியை திரும்பப்பெற மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் உடனே உத்தரவிடவும் வலியுறுத்தப்பட்டது. மேலும் தமிழக அரசின் இசைவின்றி கர்நாடக அரசு காவிரி படுகை, மேகதாது அல்லது எந்த ஒரு இடத்திலும் கட்டுமானப் பணியை மேற்கொள்ளக்கூடாது என மத்திய அரசு உத்தரவிடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் குறித்து பேசிய துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், மேகதாது அணை தொடர்பாக இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கர்நாடக அரசு சட்டத்திற்கு புறம்பாக அணை கட்டுவது தவறு என்பதை வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது என்று தெரிவித்தார். பின்னர் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகதாது குறித்து பேச சட்டப்பேரவை கூட்டியதற்கு நன்றி தெரிவித்தார்.
பின்னர் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்று தெரிவித்தார். தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்தது கர்நாடகாவில் ஆண்ட காங்கிரஸ் கட்சி என்றும், காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com