ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் 150 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் பரிதாபமாக உயிரிழந்தன.
மிகவும் குறைவான மழைப்பொழிவு, பருவநிலை மாற்றம், மரங்கள் அழிப்பு போன்ற காரணங்களால் அந்நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் நீர் நிலைகள் முற்றிலும் வறண்டு காணப்படுகிறது.
கடந்த 3 மாதங்களாக தொடரும் இப்போக்கினால் வனஉயிரினங்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளன. கடந்த அக்டோபர் மாதம் நீர் மற்றும் உணவின்றி 55 யானைகள் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது கடந்த சில வாரங்களில் 150 யானைகள் மற்றும் காட்டெருமைகள், காட்டு நாய்களும் பட்டினியால் துடிதுடித்து உயிரிழந்து வருகின்றன.
இந்நிலையில் பசி மற்றும் தாகத்தால் உயிரிழக்கும் விலங்குகளின் தந்தம், பல் மற்றும் நகம் உள்ளிட்ட பாகங்களை அறுத்தெடுத்து கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் விற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.