டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவான விளக்கம் அளிக்காத சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ஓராண்டுக்கு பின் சென்னை மாநகராட்சி சார்பில் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சியின், இந்த காலதாமதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. பின்னர் நடைபெற்ற விசாரணையின்போது, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்காக கழிவுநீர் அப்புறப்படுத்தப்பட்டதாக கூறினார். கால்வாய்கள் தூர்வாரவும், அதற்காக எந்திரங்கள் வாங்குவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை குறிப்பிட்டார். இதுதவிர பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நிதி ஒதுக்கீடு செய்தது சரிதான், என்ன பணிகள் செய்தீர்கள்? என்பது தெளிவாக தெரியப்படுத்தப்படவில்லை. எனவே, டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து 18ம் தேதிக்குள் தெளிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ரூபாய் 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்தனர். மேலும் வழக்கு விசாரணையை 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.