கோவை மாவட்டம் சூலூர் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய கல்லூரி மாணவர்கள் 4 பேர், போதை தலைக்கேறி அங்கேயே மயங்கி விடவே, அவர்கள் மீது ரயில் மோதியதில் துடிதுடித்து உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த கருப்பசாமி, கவுதம் ஆகிய இரு இளைஞர்கள், சூலூரில் உள்ள ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரியில் அரியர் தேர்வு எழுதுவதற்காக நேற்று அங்கு சென்றனர்.
அருகில் வாடகைக்கு அறை எடுத்து தங்கிய அவர்கள், தற்போது அதே கல்லூரியில் படிக்கும் கொடைக்கானலைச் சேர்ந்த சோதிக் ராஜா, தேனியைச் சேர்ந்த விஸ்வனேஷ் மற்றும் நிலக்கோட்டையைச் சேர்ந்த ராஜசேகர் ஆகியோரை மது அருந்த அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து மதுபாட்டில்கள் வாங்கிய அவர்கள், சூலூர் – இருகூர் இடையே ராவத்தூர் என்ற இடத்தில் உள்ள தண்டவாளத்திற்குச் சென்று அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
நேரம் செல்லச் செல்ல போதை தலைக்கேறவே விஸ்வனேஷ் தவிர்த்து மற்று அனைவரும் தண்டவாளத்தில் மயங்கி விட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்போது கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அதிவிரைவு ரயில், தண்டவாளத்தில் மயங்கிக் கிடந்த இளைஞர்கள் மீது ஏறியது. இதில் தண்டவாளத்தில் மது போதையில் மயங்கிக்கிடந்த நால்வரும் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்து அங்கு சென்ற போத்தனூர் ரயில்வே போலீசார், 4 பேரின் சடலங்களை மீட்டதுடன், காயத்துடன் உயிருக்கு போராடிய விஸ்வனேசை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தண்டவாளத்தின் ஓரத்தில் விஸ்வனேஷ் அமர்ந்திருந்திருக்கலாம் என்றும் அதன் காரணமாக அவர் படுகாயங்களுடன் தப்பி இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போத்தனூர் ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.