Sunday , 16 December 2018
Home » தமிழ்நாடு » கும்பகோணத்தில் வங்கி பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம்!

கும்பகோணத்தில் வங்கி பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம்!

3கும்பகோணத்தில், அபயம் தேடி நின்ற ராஜஸ்தான் மாநில இளம்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 இளைஞர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் வங்கியில் வேலைக்கான பயிற்சியில் சேர்வதற்காக, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண், கடந்த 2ஆம் தேதி நள்ளிரவில் அங்கு வந்தார். கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வெளியே ஆட்டோ ஒன்றை பிடித்த இளம்பெண், தாம் தங்க வேண்டிய ஹாஸ்டலின் முகவரியைக் குறிப்பிட்டு அங்கு செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால், அவரை நீண்டநேரம் ஆட்டோவில் வைத்து சுற்றிய ஓட்டுநர், பின்னர் சாக்கோட்டையில் இருட்டான பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார். சிறிதுநேரத்தில் அங்கு வந்த செட்டி மண்டபத்தைச் சேர்ந்த தினேஷ், வசந்த் ஆகிய 2 இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், தங்கள் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன், அன்பரசன் ஆகிய 2 பேரை அழைத்து, அந்த பெண்ணை மேலும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், தனக்கு நேர்ந்த கொடுமையை ரயில்வே காவல்துறையினர் மற்றும் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அலட்சியமாக இருந்துள்ளனர். இதையடுத்து, வங்கி அதிகாரிகள், தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரை தொடர்பு கொண்டு, புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து கும்பகோணம் காவல்துறையினர் கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ததோடு, தினேஷ், வசந்த், புருஷோத்தமன் மற்றும் அன்பரசன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தினேஷ் மற்றும் வசந்த் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை, வரும் 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com