Thursday , 21 March 2019
Home » உலகம் » இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்தார் அதிபர் சிறிசேனா

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்தார் அதிபர் சிறிசேனா

1இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வந்த நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவியிறக்கம் செய்த அதிபர் மைத்திரிபால சிறிசேன, கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி, மகிந்தா ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். இதையடுத்து, இலங்கை நாட்டில் உள்நாட்டு அரசியல் குழப்பம் உச்சத்தை அடைந்தது. பதவியிறக்கம் செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கே, தமக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் நாடாளுமன்றத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென வலியுறுத்தி வந்தார். 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 95 பேரின் ஆதரவு மட்டுமே ராஜபக்சேவுக்கு இருந்ததால், பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், நாடாளுமன்றத்தை முடக்கிய அதிபர் சிறிசேனா எதிர்க்கட்சி உறுப்பினர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதுடன், நவம்பர் 14ம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்றும் அவர் அறிவித்தார். இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் பிரகடனத்தில் அதிபர் சிறிசேனா நேற்று இரவு கையெழுத்திட்டார். ஜனவரி 5ம் தேதி நாடு தழுவிய பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும், புதிய அரசு ஜனவரி 17ம் தேதி பொறுப்பு ஏற்கும் என்றும் அரசாணையில் அவர் அறிவித்துள்ளார்.அதிபரின் அறிவிப்பை அடுத்து, ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. தேர்தலை சந்திக்க தங்கள் கட்சி தயாராக இருப்பதாகவும், அதே நேரத்தில் அதிபரின் முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதாகவும் ரணில் அமைச்சரவையில் இடம்பெற்ற மங்கள சமரவீரா தெரிவித்தார். இதனிடையே இலங்கையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com