
தேர்தல் நடைமுறை மற்றும் பன்முகத்தன்மை, அரசின் செயல்பாடு, அரசியல் பங்கேற்பு, அரசியல் கலாசாரம் மற்றும் குடிமக்கள் உரிமைகள் ஆகிய 5 அம்சங்களின் அடிப்படையில் சர்வதேச ஜனநாயக தரக் குறியீடு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. உலக நாடுகளில் ஜனநாயகத்தின் நிலை குறித்து ஆண்டுதோறும் தி எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் தரக்குறியீட்டை வெளியிட்டு வருகிறது.
அதில் கடந்த ஆண்டு 41-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இந்த முறை 10 இடங்கள் பின்தங்கி 51-ஆவது இடத்தில் இருக்கிறது. குடிமக்கள் உரிமையில் ஏற்பட்ட சறுக்கலே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக திமுக எம்.பி.கனிமொழி தமது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
உலக ஜனநாயக குறியீட்டில், இந்தியா ஒரே ஆண்டில் 10 இடங்கள் கீழிறங்கியிருப்பது, இந்தியாவில் உரிமைகள் எப்படி பறிக்கப்பட்டு வருகின்றன என்பதை உணர்த்துகிறது. ஒரு வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது என பதிவிட்டுள்ளார்.