Tuesday , 19 June 2018
Home » தமிழ்நாடு » ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட சிலைகளை, மீட்டு வர ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் பேச்சுவார்த்தை!

ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட சிலைகளை, மீட்டு வர ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் பேச்சுவார்த்தை!

dc-Cover-gj0ih075f8qqhhet60mgqltsh3-20170709015449.Mediகாஞ்சிபுரத்தில் இருந்து கடத்தப்பட்டு ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சோமாஸ்கந்தர் சிலை உள்ளிட்ட தொன்மைவாய்ந்த சிலைகளை மீட்டு தமிழகம் கொண்டு வர ஆஸ்திரேலிய தூதருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
தமிழக கோவில்களில் இருந்து கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு கொண்டு வர சிலைகடத்தல் தடுப்பு பிரிவின் மூலம் தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்து சிதிலம் அடைந்து விட்டதாகக் கூறி, கடத்தப்பட்ட சோமாஸ்கந்தர் சிலை ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தலைமை ஸ்தபதி முத்தையா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுபோலவே 2005- 2009ம் ஆண்டுகளுக்கு இடையில் சுபாஷ் கபூரிடம் இருந்து விலைக்கு வாங்கி ஆஸ்திரேலியாவின் கான்பெரா தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள மேலும் 4 சிலைகள் அங்கு இருப்பதும் தெரியவந்துள்ளது. அந்த சிலைகளை மீட்டு தமிழகம் கொண்டுவர சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதன் முதல்கட்டமாக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் முன்னிலையில், சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல், சென்னையில் உள்ள ஆஸ்திரேலிய துணைத் தூதர் சூசன் கிரேஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.தகுந்த ஆதாரங்களைத் தந்தால் சிலைகளை ஒப்படைக்க தயாரக இருப்பதாக ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியக துணை இயக்குனர் கிறிஸ்டன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்ததாகவும், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் சிலைகளை மீட்டுக் கொண்டு வருவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com