Tuesday , 30 November 2021
Home » தமிழ்நாடு » அமைப்பு சாராத் தொழிலாளர்கள் சட்டத்தை, தமிழக அரசு முறையாக அமல்படுத்த வேண்டும்!

அமைப்பு சாராத் தொழிலாளர்கள் சட்டத்தை, தமிழக அரசு முறையாக அமல்படுத்த வேண்டும்!

Vasan_1411604fஅமைப்பு சாராத் தொழிலாளர்கள் சட்டத்தை தமிழக அரசு முறையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.
இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புச் சட்டத்தை 2008-ஆம் ஆண்டில் மத்திய அரசு இயற்றியது. நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் உள்பட அனைத்து அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம், விபத்தில் இறந்தால் நஷ்டஈடு, மருத்துவ வசதி, வீட்டு வசதி, தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி வசதி உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புகள் இந்தச் சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டது. அதன்படி, தமிழக அரசு தொழிலாளர் நல வாரியம் கீழ் அமைப்புசாராத் தொழிலாளர்களுக்காக நலவாரியம் அமைக்கப்பட்டு, அதில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை கால தாமதமின்றி வழங்க வேண்டும். தற்போது இந்தத் உதவித் தொகை வழங்குவதில் காலதாமதம் ஆகிறது. திட்ட வரைவுகள் படி நிதி ஒதுக்காததுதான் இந்தப் பிரச்னைக்குக் காரணமாகும் என்று தெரிவித்தார்.

தொழிலாளர்களின் பதிவு சான்றுகளை முன்பு தொழிற்சங்கத் தலைவர்கள்தான் உறுதி செய்தனர். தற்போது, கிராம நிர்வாக அதிகாரிகளால் சான்றளிக்கப்படுவதால், இந்தக் காலதாமதம் ஆகிறது. எனவே, திட்ட வரைவுகளின் படி குறித்த காலத்தில் நிதி ஒதுக்க வேண்டும். இந்தச் சட்டம் தமிழகத்தில் முறையாக அமல்படுத்தப்பட்டால், ஒரு சில சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி உதவியும் கிடைக்கும். ஆனால், இந்தச் சட்டத்தை தமிழகம் உள்பட எந்த மாநிலமும் சரிவர அமல்படுத்தவில்லை. எனவே, மத்திய, மாநில அரசுகள் இந்தச் சட்டத்தை முறையாக நடைமுறைபடுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com