
ஈரானுடன் அமெரிக்கா தொடர்ந்து விரோதப்போக்கை கடைப்பிடித்து வருகிறது. இந்த நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத் வந்திருந்த இடத்தில், ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானியை (வயது 62) அமெரிக்கா அதிரடியாக வான்தாக்குதல் நடத்தி கொன்றது உலக அரங்கை அதிர வைத்துள்ளது. இதனால், அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈராக்கின் அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் உள்ள ராணுவ தளம் மீது ஈரான் ராக்கெட் தாக்குதல் நடத்தியது. 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடத்தப்பட்டதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது. 80 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதால், மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணய் விலை 3.5 சதவீதம் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால், பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தங்கம் விலையும் உயரும் எனக்கூறப்படுகிறது.